புதுடெல்லி: சீனாவுக்கு தாமிரம் ஏற்றுமதி செய்வதில் சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சத்தீஸ்கர் மாநிலத்தின் மூத்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தாமிர பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சத்தீஸ்கர் குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது. அதன்படி, இம்மாநிலம் சீனாவுக்கு 12,000 மெட்ரிக் டன் அளவு கொண்ட தாமிரம் செறிவூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த முக்கிய ஏற்றுமதி ராய்ப்பூரில் உள்ள மல்டி-மாடல் லாஜிஸ்டிக் பார்க்கிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் களத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் அதிகரித்து வரும் பலத்தை இந்த ஏற்றுமதி பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு முன்பாக, 2,200 மெட்ரிக் டன் தாமிரம் கடந்த நவம்பர் 11-ம் தேதியன்று விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல்வழியாக சீனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
