கோவை: சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம். இது சட்டபூர்வ நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி வழக்குத் தொந்தரவுகளை குறைக்கும் என மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் சுமதி தெரிவித்துள்ளார்.
இந்திய தர நிர்ணய அமைவனம்(பிஐஎஸ்) கோவை கிளை அலுவலகம் சார்பில், ‘மனக் மந்தன்’ என்ற பெயரில் மருத்துவமனை விலைப்பட்டியல் நிலைப்படுத்தல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கொடிசியா சாலையில் அமைந்துள்ள மண்டல அறிவியல் மைய வளாகத்தில் இன்று நடந்தது.
மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் டாக்டர் சுமதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசும் போது, சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம். இது சட்டபூர்வ நம்பகத்தன்மையை உறுதிப் படுத்தி வழக்குத் தொந்தரவுகளை குறைக்கும். ஒரே மாதிரியான விலைப்பட்டியல் வடிவமைப்பு அரசுக்கு ஆதாரப்பூர்வமான, விளைவுள்ள சுகாதார கொள்கைகளை உருவாக்க உதவும்” என்றார்.
இந்திய தர நிர்ணய அமைவனம்(பிஐஎஸ்) கோவை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநர் மற்றும் விஞ்ஞானி (எஃப்) பவானி பேசும் போது, பங்குதாரர்கள் நிலையான உருவாக்கும் செயல்முறையில் ஈடுபடுவது மிக முக்கியம். சுகாதார துறையில் வெளிப்படைத் தன்மை, நுகர்வோர் நம்பிக்கை ஆகியவற்றை மேம்படுத்துவதில் நிலையானங்கள் பெரும் பங்காற்றுகின்றன” என்றார்.
இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு பேசும் போது, மருத்துவமனைகளின் திறனுக்கு ஏற்ப விலைப்பட்டியல் முறை மாறுபட வேண்டும். மருத்துவமனை அளவு மாறுபடும் என்பதால், அவற்றுக்கு ஏற்ப விலைப்பட்டியல் வடிவமைப்பும் மாற வேண்டும்” என்றார்.
இந்திய மருத்துவ சங்க நிர்வாகி ரவிக்குமார், சுகாதார மேலாண்மையில் வெளிப்படைத் தன்மை, சரியான ஆவணப் படுத்தல் மற்றும் நோயாளிகளுடன் விளக்கமான தொடர்பு ஆகியவற்றின் அவசியம் குறித்து பேசினார்.
‘பிஐஎஸ்’ தலைமையக விஞ்ஞானி(சி பிரிவு), உதம் சிங், ‘பிஐஎஸ்’ கோவை கிளை அலுவலக விஞ்ஞானி(சி), ஜோத்ஸ்னா பிரியா ஆகியோர் பேசினர். மருத்துவமனை விலைப்பட்டியல் நிலைப்படுத்தலுக்கான ஒரே மாதிரியான மற்றும் வெளிப்படையான வடிவமைப்பை உருவாக்க நிபுணர்களின் கருத்துகளையும் பங்குதாரர்களின் பின்னூட்டத்தையும் பெறுவதை நோக்கமாக கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
120-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவமனைகள், ஆய்வக மையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் பிற பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
