அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்ட அவரை எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் இது வரை ஏன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வில்லை என்பதை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு திங்கட்கிழமை (08) அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வில்லை என மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

