சுமந்திரனின் கர்த்தால்? நிலாந்தன்.

 

சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். அவரைச் சுற்றியிருக்கும் யாருமே அவருக்கு கடந்த 15ஆம் திகதி மடுப் பெருநாள் என்பதைச் சொல்லவில்லையா? இது நல்லூர் திருவிழாக் காலம் என்பதைச் சொல்லவில்லையா?இந்த இரண்டு திருவிழாக்களுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் அவர்களை ஏற்றி இறக்க பேருந்துகள் ஓடும். குறிப்பாக மடுத் திருவிழாவுக்கு இந்துக்களும் போவார்கள்.அது மத பேதமின்றி இன பேதமின்றி யாத்திரிகர்கள் வந்துகூடும் ஓராலயம். பெருநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்னரே யாத்திரிகர்கள் வரத்தொடங்கி விடுவார்கள்.எனவே தொடர்ச்சியாக சில நாட்களுக்கு வடக்கிலிருந்து பேருந்துகள் ஓடும்.இந்த விடயங்களை ஏன் சுமந்திரன் கவனத்தில் எடுக்கவில்லை?அவரைச் சுற்றியிருக்கும் யாருமே இதை அவருக்குச் செல்லவில்லையா?அல்லது தனது மக்களின் பண்பாட்டு பெருவிழாக்களைக் குறித்துச் சிந்திக்க முடியாத அளவுக்கு அவர் தன்னுடைய மக்களின் பண்பாட்டு இதயத்திலிருந்து புறத்தியாக நிற்கின்றாரா ?இது போன்ற பண்பாட்டு விடயங்களைச் சுட்டிக்காட்டுவதற்கு அவருக்கு அருகில் யாரும் இல்லையா? அல்லது அவர் யாரிடம் கேட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்?அல்லது அவர் முடிவெடுக்கும்பொழுது யாரிடமும் எதையும் கேட்பதில்லையா?

அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி அல்ல.அவருடைய வார்த்தைகளில் சொன்னால் மக்களின் ஆணை அவருக்கு இல்லை. கட்சிக்குள்ளும் அவர் பதில் செயலாளர்தான்.பதில்தான். ஆனால் அவர்தான் கட்சியின் முகமாக,கட்சியின் எல்லாமமாகத் தோன்றுகிறார்.அண்மையில் அவர் வெளி நாடுகளுக்குப் போயிருந்தார். அங்கே அவர் ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாக அவருடைய அரசியல் எதிரிகள் கூறுகிறார்கள்.வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு அவர் அவ்வாறு மேற்கத்திய ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

அது தனிப்பட்ட பயணம் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆனால் அவர் ராஜதந்திரிகளைச் சந்தித்ததாகப் புலம்பெயர்ந்த தமிழர் தரப்புகள் கூறுகின்றன.அவை கூறுவது உண்மையாக இருந்தால்,அவர் கட்சியின் அனுமதியோடுதான் அச்சந்திப்புகளில் ஈடுபட்டாரா?அங்கே என்ன கதைக்கவேண்டும் என்பதனை கட்சி ஏற்கனவே கூடி முடிவெடுத்திருந்ததா? அவ்வாறான சந்திப்புகளில் என்ன கதைக்கப்பட்டது என்பதனை அவர் கட்சிக்குத் தெரிவித்தவரா?அதை அவர் மக்களுக்குக் கூறத் தேவையில்லையா?

நடப்பு நிலைமைகளைப் பார்த்தால், அவர் யாரோடும் எதையும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது.கடந்த 20 மாதங்களாக,அதாவது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது கட்சி ஆட்களாலேயே நிராகரிக்கப்பட்ட பின்,அவருடைய நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால், ஏறக்குறைய மந்திரித்துவிட்ட சேவலைப் போல அவர் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்.அடிக்கடி காணொளிகளில் வருகிறார்.கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்துவது;கட்சியின் முகமாகத் தொடர்ந்தும் தோன்றுவது; கட்சியின் தீர்மானங்களைத் தானே எடுப்பது;மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது;எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக கட்சி தொடர்பான ராஜதந்திர நகர்வுகளை தானே முன்னெடுப்பது….இதைத்தான் கடந்த 20 மாதங்களாக அவர் செய்து வருகிறார். கட்சிக்குள் யாரும் அதை எதிர்ப்பதாகத் தெரியவில்லை.

அவர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த விடயம் சரியானது. அதை மனோ கணேசனும் முஸ்லீம் தலைவர்களும் ஆதரித்துள்ளார்கள் .படையின் முகாம்கள் மக்கள் குடியிருப்புகள் மத்தியில் இருப்பதினால்தான் கடந்த வாரம் முல்லைதீவில் இடம்பெற்றது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக சுமந்திரன் கூறுகிறார். தமிழர் தாயகத்தில் படையினரை நீக்கக் கோரி தமிழ் மக்கள் போராட வேண்டும். அதில் சந்தேகம் இல்லை. அந்த இடத்தில் சுமந்திரன் சரி. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கடந்த 16ஆண்டுகளாக படைமய நீக்கம் முழுமையாக நிகழவில்லை.இலங்கையின் மொத்தப் படைக் கட்டமைப்பில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதி தமிழ் பகுதிகளில்தான் நிலை கொண்டிருக்கிறது என்று உத்தியோகப்பற்றற்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.எனவே படைமய நீக்கம் அவசியம். அதை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட வேண்டியதும் அவசியம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

ஆனால் பிரச்சினை எங்கே வருகிறது என்றால், அதற்காக கடையடைப்பு ஒரு பொருத்தமான போராட்டமா என்பதுதான்.சுமந்திரனை எதிர்க்கும் பலரும் கடையடைப்பையும் எதிர்க்கிறார்கள்.அது தவறு.அரசியலில் சில சமயம் பிழையான ஆட்கள் சரியான செயல்களைச் செய்வதுண்டு.கடையடைப்பு என்ற போராட்ட வடிவம் குறித்து கேள்விகளை எழுப்பலாம்.வேறு போராட்ட வடிவங்களைக் குறித்துச் சிந்திக்கலாம். அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்திலும் அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் குறிப்பாக, ஐநாவின் கவனத்தை ஈர்க்கும்விதத்திலும் அதைவிடக் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்கள் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கும் “கோ குரூப்” நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கத்தக்க போராட்ட வடிவங்களைச் சிந்திக்கலாம்.

அரசாங்கத்துக்கு நோகத்தக்க விதத்தில் போராடுவது என்று சொன்னால் சம்பவம் நடந்த மாவட்டத்தில் ஒரு மக்கள் பேரெழுச்சியை ஒழுங்குபடுத்தலாம். அதை ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தலாம். இது முதலாவது. இரண்டாவதாக,அரசு அலுவலகங்களை முடக்கக்கூடிய விதத்தில் அரசு அலுவலகங்களைச் சுற்றி வளைக்கலாம்.மூன்றாவதாக,ஐநாவில் முடிவெடுக்கும் நாடுகளின் தூதரகங்களின் முன்னாள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்யலாம்.அந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் படைப்புத்திறன் மிக்கவைகளாக இருக்கவேண்டும்.மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வந்த பொழுது நிகழ்த்தப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தைப் போல.

எனவே இதுபோன்ற பல வழிகளிலும் அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்தில் போராடலாம். கடையடைப்பு அழைப்பவருக்கு இலகுவான ஒரு போராட்டம். மாறாக,கடைகளை மூடும் வியாபாரிகளுக்கும் பொதுப் போக்குவரத்தை நிறுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் அன்றாடம் காய்சிகளுக்கும் அன்றாடம் வேலை செய்பவர்களுக்கும் அதனால் இழப்பு ஏற்படும். அந்த இழப்பைக்கூட நாட்டுக்காக ஒருநாள் செய்யும் தியாகம் என்று நியாயப்படுத்த முடியும். ஆனால் கடையடைப்போ அல்லது பொது முடக்கமோ எதுவாக இருந்தாலும் அது அரசாங்கத்துக்கு நோக வேண்டும். அரசாங்கத்துக்கு நோகக் கூடிய விதத்தில் அழுத்தமாகப் போராட வேண்டும்.

அப்படிப்பார்த்தால் கடையடைப்பு அரசு அலுவலகங்களுக்கு நோகாது. ஏனென்றால் கடையை அடைத்தாலும் பொதுப் போக்குவரத்தை முடக்கினாலும் அரச அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும். ஏன் பாடசாலைகளே இயங்கும். ஆசிரியர்கள் வருவார்கள்; அதிபர்கள் வருவார்கள்; மாணவர்கள் மட்டும் வர மாட்டார்கள்.நாளை, இரண்டாம் தவணை விடுமுறை முடிந்து பாடசாலைகள் மீண்டும் தொடங்குகின்றன.எனவே கடையடைப்பைவிட அழுத்தமான,கூர்மையான படைப்புத்திறன்மிக்க அறவழிப் போராட்டங்களை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதற்குக் கூடிக்கதைக்க வேண்டும். அதைவிட முக்கியமாக தமது சொந்த மக்களை நேசிக்க வேண்டும்.தனது மக்களை விசுவாசிக்கும் எந்த ஒரு செயற்பாட்டாளருக்கும் போராட்டத்தின் வழி தானாகத் திறக்கும்.

அதிலும் குறிப்பாக உலகில் வெற்றி பெற்ற பெரும்பாலான எல்லா அறவழிப் போராட்டங்களும் சட்ட மறுப்புப் போராட்டங்கள்தான். சட்டத்தரணிகள் தங்களுடைய சட்டரீதியிலான சௌகரிய வலையத்துக்கள் நின்றுகொண்டு போராட முடியாது.சட்ட மறுப்பாகப் போராட சுமந்திரன் தயாரா?

ஆனால் சுமந்திரனின் போராட்டத்தை விமர்சிப்பவர்கள் அவ்வாறு பார்க்கவில்லை. “அவர் மக்களுக்காகப் போராடவில்லை.அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காகப் போராடவில்லை. அல்லது படைமய நீக்கத்துக்காகப் போராடவில்லை. மாறாக கட்சிக்குள் தன் முதன்மையைப் பலப்படுத்தவும் தமிழ்த்தேசிய அரசியலில் தன்னுடைய இன்றியமையாமையை நிருபிப்பதற்கும் அவர் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்துகிறார்” என்றுதான் அவர்கள் விமர்சிக்கின்றார்கள்.

அவ்வாறு விமர்சிக்கத்தக்க விதத்தில்தான் அவருடைய நடவடிக்கைகளும் காணப்படுகின்றன.கடந்த வாரம் ஐநாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிவில் சமூகங்களோடு இணைந்து அந்தக் கடிதத்தைத் தயாரித்தது.அந்தக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போடவில்லை.அந்த முடிவைப் பெரும்பாலும் சுமந்திரனே எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது.அவர் சொன்னதைச் சிவஞானம் திரும்பிச் சொல்கிறார் என்றுதான் எல்லாரும் நம்புகிறார்கள். எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கு சுமந்திரன் தயாராக இருக்கவில்லை.அந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணைந்து முடிவெடுத்திருந்திருந்தால் இன்றைக்கு கடையடைப்பை அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு போராட்டத்தை எல்லாருமாகச் சேர்ந்து தரமாகச் செய்திருக்கலாம்.அதற்குத் தமிழரசுக் கட்சியின் ஈகோ இடம் கொடுக்கவில்லை.

ஆனால் அதற்கு சுமந்திரன் ஒவ்வொரு நாளும் காணொளியில் வந்து விளக்கம் கொடுக்கிறார்.அவர் தரும் விளக்கங்களில் முக்கியமானது, நாங்களே பெரிய கட்சி நாங்களே முதன்மைக் கட்சி எனவே நீங்கள் கடிதத்தை எழுதிவிட்டு எங்களை அதில் கையெழுத்துப் போடுமாறு கேட்க முடியாது என்ற பொருள்பட அமைந்துள்ள விளக்கந்தான். அதில் ஒரு பகுதி உண்மை. அவர்கள்தான் பெரிய கட்சி;அவர்கள்தான் முதன்மைக் கட்சி. அதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், கடந்த 16 ஆண்டுகளாக அவர்களே முதன்மைக் கட்சியாகவும் முடிவெடுக்கும் கட்சியாகவும் இருந்து தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? கடந்த 16 ஆண்டுகாலத் தமிழரசியலில் ஏற்பட்ட தேக்கங்கள்,தோல்விகள், பின்னடைவுகள் போன்ற எல்லாவற்றிற்கும் அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதுமட்டுமல்ல அனைத்துலக அளவில் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்களின் விவகாரம் மேலும் நீர்த்துப்போகக்கூடிய ஆபத்து தெரிகிறது.அதற்கும் தமிழரசுக் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். 2015இலிருந்து ஐநாவின் நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தை நோக்கி தமிழரசியலைச் செலுத்தியது முக்கியமாக சுமந்திரனும் சம்மந்திருந்தான்.அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று பின்னர் சுமந்திரன் சொன்னார். அது அவர்களுடைய தனிப்பட்ட தோல்வி அல்ல. இனத்தின் தோல்வி.இப்பொழுதும் ஐநாவை கையாளும் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் அணுகுமுறை வெளிப்படையாயானதாக, ஐக்கியமானதாக இல்லை.இதில் வரக்கூடிய தோல்விக்கு யார் பொறுப்புக் கூறுவது? கட்சி வேறுபாடுகளைத் தூக்கி ஓரத்தில் வைத்து விட்டு இனமாகத் திரள வேண்டிய விடயங்களில் அதாவது ஐநாவைக் கையாள்வது,படை நீக்கத்துக்காகப் போராடுவது போன்ற விடயங்களில் இனமாகத் திரள முடியாததற்கு யார் பொறுப்பு ?சுமந்திரன் பொறுப்பில்லையா?

The post சுமந்திரனின் கர்த்தால்? நிலாந்தன். appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply