மதுரை: செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு பாஜக மறைமுக நெருக்கடி கொடுக்கிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் விசிக சார்பில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு செங்கோட்டையன் எடுத்து வரும் முயற்சி பாராட்டுக்குரியது. அது அவர்களி்ன் உட்கட்சி பிரச்சினை என்றாலும் கூட அந்தக்கட்சியும் பெரியாரின் இயக்கத்தின் பாசறையில் உருவான ஒரு அரசியல் இயக்கம் என்கிற வகையில் அதன் மீது நமக்கு ஒரு மதிப்பும், மதிப்பீடும் உண்டு. ஆகவேதான் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற சக்திகளின் பிடியில் அந்த இயக்கம் சிக்கி சீரழிந்துவிடக்கூடாது என்கிற கவலையை அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கிறோம்.
இப்போதும் நமக்கு அந்தக் கவலை உண்டு. செங்கோட்டையன் எந்த பின்னணியில் இயங்குகிறார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் பொதுவாக இந்தப் பின்னணியி்ல் பாஜகவின் கை இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவ்வாறு இருக்குமேயானால் அதிமுகவின் எதிர்காலத்துக்கு உகந்ததாக இது அமையாது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மறைமுகமான நெருக்கடியை பாஜகதான் உருவாக்குகிறது என்கிற விமர்சனம் இப்போதும் வலுவாக எழுந்துள்ளது.
பாஜக எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் இப்படி மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைக்கிறதோ அந்த மாநிலக் கட்சிகளை மெல்ல, மெல்ல நீர்த்துப்போகச் செய்திருக்கிறது என்பதுதான் கடந்த கால வரலாறு. அப்படி ஒரு நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பது தான் நம்மைப் போன்றவர்களின் கவலை.
செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை. இப்போது கூட யார், யாரை சேர்க்க வேண்டும் என்பதைக் கூட வெளிப்படையாகச் சொல்லவில்லை. பழைய மூத்த தலைவர்களை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறார், யார் அந்த பழைய தலைவர்கள் என்பதை ஏன் வெளிப்படையாக சொல்லத் தயங்குகிறார் என்ற கேள்வி எழுகிறது.
மனம் திறந்து பேசுவேன் என்று அறிவித்துவிட்டு, முழுமையாக மனம் திறக்க ஏன் தயங்குகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. அவர் ஏற்கெனவே இதே போன்ற கருத்தை சொன்னார் அப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்போதும் ஏதோ ஒரு பரபரப்பான கருத்தை சொல்லப்போகிறார் என எதிர்பார்த்தோம், ஏற்கெனவே சொன்னதைத்தான் சொல்லியுள்ளதால் வரும் தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று கருதுகிறேன்.

சசிகலா, திமுகவை வெல்வோம் என்று சொல்கிறாரா, திமுக கூட்டணியை வெல்வோம் என்று சொல்கிறாரா. திமுக கூட்டணியை மக்கள் கைவிட மாட்டார்கள். மக்களின் பேராதரவு திமுக கூட்டணிக்கு இருக்கிறது. எனவே திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு தமிழகத்தில் ஒரு அணி இன்னும் உருவாகவில்லை. அதிமுகவே இன்னும் முழுமையாக ஒரு கட்சியாக உருப்பெறவில்லை என்பதைத்தான் செங்கோட்டையன் போன்றவர்களின் கோரிக்கை நமக்கு உணர்த்துகிறது.
அது இன்னும் முழுமையடைய வேண்டும்; வலிமையடைய வேண்டும். அந்த அதிமுகவும்,ஏற்கெனவே தமிழகத்தில் வேர் பரப்ப முடியாமல் திணறுகிற பாஜகவும் ஒன்று சேர்வதன் மூலம் இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே இணைந்திருக்கும் நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அவர்களால் எதிர்கொள்ள முடியாது, வீழ்த்தமுடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருக்கும் கட்சிகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன.
ஏற்கெனவே இருந்த டிடிவி.தினகரனும் வெளியேறியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த தேமுதிக எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை, ஏற்கெனவே இருந்த பாமகவும் எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை. ஆகவே தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இன்னும் ஒரு வடிவம் பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஜிஎஸ்டி மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “ஜிஎஸ்டி மறு சீராய்வால் சிறுகுறு தொழில்கள், சிறுகுறு வணிர்கள் எளிய மக்கள் பயன்பெறமுடியும் என்று சொல்ல முடியாது. 28 சதவீதமாக இருந்த சில பொருட்களளுக்கான வரியை 48 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார்கள். என்ற கடும் விமர்சனமும் எழுநதுள்ளது. இது அமெரிக்க அரசு நம் மீது விதித்திருக்கிற வரி தொடர்பான் எதிர்ப்பை மடைமாற்றம் செய்வதற்கு திசை திருப்புவதற்கு மடை மாற்றம் செய்வதற்கு கண்துடைப்பான அறிவிப்பு என்றுதான் சொல்லப்படுகிறது.” என்றார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்ததன் மூலம் பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவுவதற்கான சாட்சியமாக அமைந்துள்ளது. இதன் மூலம் சாக்ரடீஸ் போல் பெரியாரும் உலகம் முழுவதும் போற்றப்படுவார் என்று திருமவளவன் கூறினார்.