சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – 800க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னை ரிப்பன் கட்டிடம் முன்பு பணி நிரந்தரம் கோரி 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த  800 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், 16 ஜூலை 2025 முதல் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஓகஸ்ட் 1 முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு பகல், இரவு என கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், திரைப்பட பிரபலங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த முடியாது என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, போராட்டத்தை நிறுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும்  பொலிஸார் எச்சரித்தனர்.

நேற்று நடைபெற்ற 8-வது கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடினாலும், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து பணியாளர்கள், இனி முதலமைச்சர் தலைமையிலான பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில்  நேற்று நள்ளிரவில் பொலிஸார் திடீர் நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 800–900 பணியாளர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 10க்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்களில் வேறு, வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் சில பெண் பணியாளர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போராட்டம் நடந்த பகுதியில் பொலிஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பும்  பலப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply