சிஎம்டிஏ சார்பில் ரூ.53 கோடியில் நாட்டிலேயே முதல்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, கடை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
சென்னை கொளத்தூர் பகுதி வண்ண மீன் வர்த்தகத்தில் நாட்டிலேயே முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் மட்டும் சுமார் 500 குடும்பங்கள் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை சார்ந்து வாழ்கின்றனர். இதை கருத்தில்கொண்டு, கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, மீன் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதன் அடிப்படையில், வண்ண மீன் வர்த்தகத்தை பெரிய அளவில் மேம்படுத்த தமிழகத்தில் முதன்முறையாக உலகத் தரத்திலான பிரத்தியேக வண்ண மீன் வர்த்தக மையம் நிறுவப்படும் என 2021-22 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதை நிறைவேற்றும் வகையில், சிஎம்டிஏ மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைப்புடன், சென்னை வில்லிவாக்கம் சிவசக்தி நகரில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்க கடந்த ஆண்டு ஆக.28-ம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் 15,945 சதுர மீட்டர் நிலப் பரப்பில் 11,650 சதுர மீட்டர் கட்டிடப் பரப்பளவில் ரூ.53 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 188 கடைகள், 5 உணவகங்களுடன் கட்டப்பட்டது. இந்த வர்த்தக மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். மேலும், வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
இந்த வர்த்தக மையத்தில், தரைதளத்தில் 64 கடைகள், அலுவலகம், 2 உருளை வடிவ மீன் காட்சியகம், 16 ஆண்கள் கழிப்பறைகள், 8 பெண்கள் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. முதல்தளத்தில் 70 கடைகள், 16 ஆண்கள், 8 பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பறைகள், 2-ம் தளத்தில், 54 கடைகள், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 200 இரண்டு சக்கர வாகனங்கள், 188 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளும் உள்ளன.
திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, வீட்டு வசதித்துறை செயலர் காகர்லா உஷா, மீன்வளத்துறை செயலர் நா.சுப்பையன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
