8
செம்மணி மனித புதைகுழியில் குவியல் குவியலாகவும் எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதேவேளை வட்ட வடிவான தாயத்து ஒன்றும், மோதிரம் என சந்தேகிக்கப்படும் வட்ட வடிவான ஆபரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் குவியலாக உள்ள எலும்புக்கூட்டை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளமையால், அவற்றினுள் முழுமையான எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பில் உறுதியாக கூற முடியாது எனவும், அவற்றை முழுமையாக அகழ்ந்து எடுத்து பின்னரே அவை தொடர்பில் தெளிவாக கூற முடியும் என கூறப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை 40 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 49 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 07 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 198 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் 218 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.