செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும். இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியாவாழ் புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
‘இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என வலியுறுத்தினர்.
செம்மணி மனித புதைகுழியில் பல 50 இற்கும் அதிகமான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுவதன் ஊடாகவே செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்.
பிரித்தானிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்தினர்.