இந்த உலகமே பணத்தை வைத்தே இயங்குகிறது.
ஒவ்வொரு நாடும் அதன் நாணயத்தின் மதிப்பைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது.
வட்டி விகிதம், பணப்புழக்கம் என்று நாணயம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றக்கூடியதாகும். ஆனால் இங்கு ஒரு நாடு தனக்கென சொந்தமான நாணயமே இல்லாமல் இருக்கிறது.
தென் கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள குட்டி நாடு தான் மொண்டினீக்ரோ (Montenegro).
சிறிய பால்கன் நாடான மொண்டினீக்ரோ. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 6.17 லட்சம் தான்.
இந்த நாட்டில் தான் கடந்த பல காலமாகவே சொந்தமாக பணம், நாணயம் எதுவும் இல்லை.
நாணயம் இல்லையா அப்போது பொருள் வாங்கக் கொடுக்க எல்லாம் எதை பயன் படுத்துவார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
இந்தக் குட்டி நாடு கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவை தனது அதிகாரப்பூர்வ நாணயமாக ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இதன் மூலம் சொந்த நாணயம் இல்லாத நாடு என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
சரி, ஏன் இந்த நிலையை அடைந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மொண்டினீக்ரோ யூகோஸ்லாவியா சோசலிச கூட்டாட்சியின் ஒரு பகுதியாக மாறியது.
1999 வரை யூகோஸ்லாவிய தினார் அதன் அதிகாரப்பூர்வ நாணயமாக இருந்தது.
இருப்பினும், அந்த இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட நிதி முறைகேடுகள் அங்கு நடந்தது.
1990களில் மாதாந்திர பணவீக்க விகிதம் 50% ஆக இருந்தது. அதே ஆண்டில் ஜூன் மாதத்தில் 100% ஐ எட்டியது.
இது கடுமையான மற்றும் நீண்டகாலப் பணவீக்கத்திற்கு வழிவகுத்தது.
இது அங்குப் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதித்தது.
அப்போது யூகோஸ்லாவிய தினார் உலகின் மோசமான நாணயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து வேறு வழியில்லாமல் பணவீக்கத்தைச் சமாளிக்க 1999ம் ஆண்டு முதல் ஜெர்மனி நாட்டின் நாணயத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஜெர்மன் டாய்ச்ச் மார்க் மொண்டினீக்ரோவின் அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்தப்பட்டது. பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்தது.
முதலில் யூகோஸ்லாவிய தினார் மற்றும் ஜெர்மன் டாய்ச்ச் என இரண்டுமே அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்தப்பட்டது.
பின்னர் 2001ம் ஆண்டு முதல் யூகோஸ்லாவிய தினாருக்கு பதிலாக ஜெர்மன் டாயச்ச் மட்டுமே அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அடுத்தாண்டே அதாவது 2022ம் ஆண்டு முதல் ஜெர்மனி உட்பட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் யூரோவை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இது மொண்டினீக்ரோவுக்கு மீண்டும் சிக்கலாக வந்தது. இதையடுத்து மொண்டினீக்ரோவையும் வேறு வழியில்லாமல் யூரோவை ஏற்றுக்கொண்டது.
ஆனால், விஷயம் என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்கும் நாடுகள் மட்டுமே யூரோவை தமது நாணயமாக பயன்படுத்த முடியும். அப்படி இல்லை என்றால் மொனாக்கோ அல்லது வாடிக்கன் போல யூரோவை பயன்படுத்தச் சிறப்பு ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும்.
இருப்பினும், மொண்டினீக்ரோ ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும் இல்லை. அவர்களுக்கு ஒப்பந்தமும் இல்லை.
அவர்கள் தன்னிச்சையாகவே இந்த நாணயத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் முறையான ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இது மொண்டினீக்ரோ பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவியது.
மேலும், அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தையும் இது எளிதாக்கியது. இருப்பினும், கடந்த காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும் இல்லாமல் ஒப்பந்தமும் இல்லாமல் இருப்பதால் பணவியல் கொள்கைகளில் முடிவெடுக்க இவர்களால் முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளை நம்பியே இருக்க வேண்டும்.
மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சுயமாகவும் நாணயத்தை உருவாக்க முடியாது. எனவே
வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிலிருந்து வரும் யூரோவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான சிக்கல்கள் இருந்தாலும் யூரோ பயன்படுத்த ஆரம்பித்த பின்னரே மொண்டினீக்ரோ (Montenegro) பொருளாதாரம் ஓரளவுக்குச் சீரானது.
எனவே அடுத்த கட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகும் முயற்சியில் மொண்டினீக்ரோ இறங்கியுள்ளது. இருப்பினும், சில சிக்கல்களால் அது முடியவில்லை.
மொண்டினீக்ரோ சொந்தமாக ஒரு நாணயம் இல்லாத நாடாக இருந்தாலும், அப்படி மாறியதால் தான் மொண்டினீக்ரோவின் பொருளாதாரம் சீராகி இருப்பதால் சொந்தமாக நாணயம் இல்லை என்றாலும் மக்களுக்குச் சந்தோஷம் தான்!