ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றிருந்தார்.
கடந்த ஜூலை மாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.
அவரது எல்டிபி கட்சி (Liberal Democratic Party) மற்றும் அதன் கூட்டணி மேலவையில் பெருபான்மையை பெறாத நிலையில் தற்போது குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன .
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்களவையில் அவரது எல்டிபி கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை.
இதனை தொடந்து கடந்த சில மாதங்களாக தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டுமென அவரது கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, அவரது கட்சியில் இருக்கும் வலதுசாரிகள், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் ஜப்பானுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, அதனால் ஜப்பான் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பதவி விலகுவதற்கு ஷிகெரு இஷிபா முன்னதாக மறுத்திருந்தார்.
இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 141 என இருந்த எல்டிபி (Liberal Democratic Party) கூட்டணியின் எண்ணிக்கையை 122 ஆக குறைந்தது.
இந் நிலையில் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக ஷிகெரு இஷிபா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுடன் கட்சியின் தலைமைப் பதவிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாமா என்பது தொடர்பாக நாளை லிபரல் டெமாக்ரடிக் கட்சி முடிவு செய்ய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.