ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ | GST reforms will cause ₹3,700 crore revenue loss to government: SBI

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு குறைந்தபட்சம் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டத்தில், ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். ஏற்கெனவே இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% ஜிஎஸ்டி அடுக்குகளில் 12% மற்றும் 28% நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், ஆடம்பர பொருட்களுக்கு 40% சிறப்பு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதி சுமையை பெரிய அளவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-ம் தேதி முதல் குறையும். இது மக்களுக்கு நேரடியாக பலன் தரும்.

அதேநேரத்தில், இதனால் அரசுக்கு எத்தகைய இழப்பு ஏற்படும் என்பது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “ஜிஸ்டி வரி விகிதங்களைக் குறைப்பதால் அரசுக்கு குறைந்தபட்சம் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். வரி குறைவால் நுகர்வு அதிகரிக்கும் என்பதால் வரி இழப்பு ரூ.3,700 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதி பற்றாக்குறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

2017-ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் சராசரி வரி விகிதம் 14.4% ஆக இருந்தது. தற்போது அது 9.5% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் (சுமார் 295 பொருட்கள்) ஜிஎஸ்டி வரி விகிதம் 12%-ல் இருந்து 5% அல்லது 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் குறையும். இந்த வரி விகித மாற்றம் வங்கித் துறையில் பெரும்பாலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply