ஜெனிவாவை நோக்கி ஒன்று திரள முடியாத தமிழ்த் தரப்பு ?

அரசாங்கம் செம்மணி விவகாரத்தில் நேர்மையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் விதத்தில் நடந்து கொள்கிறது. கடந்த வாரம் நீதிமன்றம் பொதுமக்களை அந்த இடத்துக்கு வந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காணுமாறு அழைத்திருந்தது. அதோடு அப்பிரதேசத்தில் மேலும் புதை குழிகள் இருக்கலாமா என்பதனை பரிசோதிப்பதற்கு தேவையான ஸ்கானிங் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதுபோன்ற நடவடிக்கைகளின்மூலம் அரசாங்கம் செம்மணி விவகாரத்தில் தான் விசுவாசமாக நடப்பதாக காட்டிக் கொள்வதோடு உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை மேலும் பலப்படுத்த முயற்சிக்கின்றது.அதாவது வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரை நோக்கி அரசாங்கம் உழைக்கிறது என்று பொருள்.

ஓர் அரசுடைய தரப்பு அவ்வாறு ஜெனிவாவை நோக்கி திட்டமிட்டு உழைக்கின்ற ஒரு பின்னணியில் அரசற்ற தரப்பாகிய தமிழர்கள் என்ன செய்கிறார்கள்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கடிதத்தை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அக்கடிதம் தமிழரசுக் கட்சியின் கையெழுத்து இல்லாமலேயே போயிருக்கிறது.அதாவது அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரை எதிர்கொள்ளும் விடயத்தில் தமிழ்த் தரப்பு இரண்டாக நிற்கிறது என்று பொருள்.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மேற்படி கூட்டுக் கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ளார். எனினும் தமிழரசு கட்சியின் கையெழுத்து அதில் இல்லை என்பது பலவீனம்தான்.

கடந்த 16 ஆண்டு கால அனுபவத்தின் பின்னரும் குறிப்பாக,ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டுப் பொதுமுறையை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்தலாம் என்ற கருத்துத் தெரிவித்திருக்கும் ஒரு பின்னணியில் தமிழ் தரப்பு இவ்வாறு ஐநாவை இரண்டாக நின்று அணுகுவது என்பது தோல்விகரமானது.

ஏற்கனவே 2015ல் இருந்து 18 வரையிலும் அவ்வாறுதான் நிலைமை காணப்பட்டது. தமிழரசுக் கட்சியின் தலைமையின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலைமாறு கால நீதிக்கான ஐநாவின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் ஒரு பகுதியும் அதனை ஆதரித்தது. அதே சமயம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உட்பட புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் இன்னொரு பகுதி பரிகாரநீதியைக் கேட்டது.

ஆனால் நிலைமாறு கால நீதிக்கான பரிசோதனைகளில் ஈடுபட்டோம் அதில் தோல்வி அடைந்து விட்டோம் என்று சுமந்திரன் 2021 ஆம் ஆண்டு வவுனியாவில் நடந்த சந்திப்பில் வைத்துக் கூறினார். அச்சந்திப்பு ஐநாவுக்கு கூட்டு கடிதம் எழுதும் நோக்கத்தோடு அப்பொழுது முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது சந்திப்பாகும்.அதில் அவர் “ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பரிசோதனை செய்தோம். அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்று சொன்னார்.

அப்படியென்றால் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்காக ஐநாவுடன் இணைந்து செயற்பட்ட தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் அந்தத் தோல்விக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.ஒரு வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக் கடிதம் அவ்வாறு பொறுப்புக் கூற முற்பட்டதன் விளைவுதான் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கடிதத்தை நான்கு ஆண்டுகளின் பின் அனுப்புவதற்கு முயற்சித்த பொழுது தமிழரசுக் கட்சி அதில் கையெழுத்திட மறுத்து விட்டது. இரண்டு தரப்பும் ஒரு மேசையில் அமர்ந்திருந்து விவகாரத்தை ஒரு இனமாக அணுகுவதற்கு முடியவில்லை மட்டுமல்ல அவர்களை எவ்வாறு ஒரு மேசையில் கொண்டு வந்து இருத்த அரங்கில் உள்ள சிவில் சமூகங்களால் முடியவில்லை என்பதையும் அது காட்டுகிறது.

அதேசமயம் நிலைமாறு கால நீதியை ஆதரித்த தமிழரசுக் கட்சி அந்தப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகத் தெரிவித்ததுபோல இன்னும் சில ஆண்டுகளில் பின், கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாமல் விட்டதை தவறு என்று ஏற்றுக் கொள்ளக்கூடும்.ஆனால் இவ்வாறு தொடர்ச்சியாகத் தவறுகளை விடுவதும் அல்லது பொருத்தமற்ற நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதும்,பின் அதில் தோல்வி அடைந்து விட்டோம் என்று சில ஆண்டுகளில் பின் கூறுவதும் அரசற்ற தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆபத்தானது. முடிவுகளை எடுக்கும் தலைவர்கள் விடும் தவறுகளுக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து விலை கொடுக்க முடியாது.கடந்த 16 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் தேக்கத்துக்கும் பின்னடைவுகளுக்கும் இவ்வாறான தவறுகளே காரணம்.

கூட்டுக் கடிதத்தில் கையெழுத்து இடுவதில்லை என்ற முடிவை எடுத்தபின் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய சுமந்திரன் தாம் எதிர்காலத்தில் அந்த கடிதத்தை விடவும் அழுத்தமான பலமான விடையங்களை முன்வைத்து ஐநாவுடன் என்கேஜ் பண்ணப் போகின்றோம் என்ற பொருள்பட பேசியிருந்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுதியிருக்கும் கடிதத்தை விடவும் பலமான தீர்க்கதரிசனம் மிக்க ஒரு நகர்வாக அது அமையுமா?

ஆனால் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு ஐநாவை அணுகுவது என்ற ஒரு விடயம் தான் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் பலமானது.அந்த விடயத்தில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஒத்துழைக்க மறுத்து விட்டது.அதற்கு அவர்கள் கூறும் சில காரணங்கள் சரியாக இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமானது தமிழ்த் தரப்பு ஒன்றாக நின்று அனைத்துலக சமூகத்தை எதிர்கொள்வது என்பதுதான். அந்த விடயத்தில் தமிழ்த் தரப்பு தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் கடந்த வாரம் நிரூபித்திருக்கிறது.

கடிதம் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் சிலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.2009க்கு முன்பு ராஜதந்திரிகள் மத்தியில் அதிகம் ஆர்வத்துடன் பார்க்கப்பட்ட ஆங்கில இணையத் தளத்தின் ஆசிரியர் மேற்படி கூட்டுக் கடிதம் தொடர்பில் விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.அதுமட்டுமல்ல அக்கடிதத்தில் கையெழுத்திட்ட சில மக்கள் அமைப்புகளும் அக்கடிதம் தமக்கு காட்டப்படவில்லை என்று பகிரங்கமாக கருத்துக் கூறியுள்ளன. யாழ் ஊடக அமையும் உட்பட வேறு சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள்.

மேற்கண்ட செய்திகள் யாவும் நமக்கு உணர்த்துவது எதை என்றால் ஐநாவை நோக்கி ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்பும் விடயத்தில் தமிழ் மக்கள் பெருமைப்படும் விதத்தில் ஒன்றிணைய முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதைத்தான்.கூட்டாக கடிதம் எழுதுவதில் மட்டுமல்ல கூட்டாகச் செயற்பட வேண்டிய வேறு பல விடயங்களிலும் தமிழ் மக்கள் ஒன்றாக இல்லை என்பதைத்தான் கடந்த வாரம் கிடைத்த செய்திகள் உணர்த்துகின்றன

வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டுப் போராடும் அம்மாமார்களுக்க்கிடையிலும் மீண்டும் முரண்பாடுகள் பெரிதாகியிருக்கின்றன.கடந்த வாரம் தென்மராட்சியில் நடந்த ஒரு சந்திப்பின் பின் அம்மாமார் தெரிவித்த தகவல்களின்படி அந்த அமைப்புகள் இரண்டு பட்டு நிற்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மீதும் அவர்களோடு ஒத்துழைக்கும் அம்மாமார் சிலர் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்கும் விடயத்திலும் தமிழ் மக்களால் ஒன்றாகத் திரள முடியவில்லை

தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் அதுதான் நிலைமை என்று தோன்றுகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கனடாவில்தான் தாயகத்துக்கு அடுத்தபடியாக அதிக தொகை தமிழர்கள் வாழ்கிறார்கள்.நீதிக்கான போராட்டத்தில் ஒப்பீட்டளவில் உற்சாகமூட்டும் முன்னேற்றங்கள் அங்குதான் ஏற்பட்டன. ஆனால் அங்கே கடந்த வாரம் நடக்கவிருந்த தமிழ்த் தெரு விழா ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட தமிழ் அமைப்புகளுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாமையே காரணம் என்று தெரிகிறது.

அதாவது செம்மணி புதிய வாய்ப்புகளைத் திறந்து வைத்திருக்கும் ஒரு காலகட்டத்தில்கூட தமிழ்த் தரப்பு தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பெருமைப்படத்தக்க விதத்தில் ஒன்றாக இல்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு செம்மணி எதிர்பாராமல் வந்த ஒரு சோதனை. அதே சமயம் தமிழ் மக்களை பொறுத்தவரை அது எதிர்பாராமல் கிடைத்த ஒரு வாய்ப்பு. “செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்கான பயணத்தில் புதிய கதவுகளை திறந்துவிடும்.அது மனிதப்படுகொலை,யுத்தக் குற்றம் இடம்பெற்ற இடம்.இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன” என்று மூத்த சட்டத்தரணியும் சட்டச் செயல்பாட்டாளரும் ஆகிய ரட்ணவேல் கூறியுள்ளார்.

இவ்வாறு எதிர்பாராத விதமாக தனக்குச் சோதனையாக வந்த புதைகுழியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் புத்திசாலித்தனமாக,நிதானமாகக் கையாண்டு வருகிறது.ஆனால் தமிழ்த் தரப்போ அந்த விடயத்தை ஒன்றுதிரண்டு கையாள முடியவில்லை.

 

நன்றி

Leave a Reply