டிசம்பரில் புட்டின் இந்தியாவுக்கு பயணம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எதிர்வரும் டிசம்பரில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று கிரெம்ளின் வெள்ளிக்கிழமை (29) தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக புது டெல்லி மீது அமெரிக்கா வரி விதிப்பு மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் புட்டினின் இந்த விஜயம் அமையவுள்ளது.

இந்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை கிரெம்ளின் வெளிவிவகாரக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் வெளியிட்டார்.

திங்களன்று (செப்டெம்பர் 01) சீனாவில் நடைபெறும் பிராந்திய உச்சிமாநாட்டில் புட்டின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திப்பார் என்று கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் கூறியுள்ளார்.

உக்ரேனில் மொஸ்கோவின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புது டெல்லி, ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்கியதற்கு தண்டனையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு வரிகளை விதித்துள்ளார்.

எரிசக்தி வருமானம் மெஸ்கோவின் அரச வருவாயின் முக்கிய ஆதாரமாகும்.

இந்தியாவின் முன்னணி ஆயுத விநியோகஸ்தர்களில் ரஷ்யாவும் ஒன்றாகும்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சூடான உறவுகள் சோவியத் சகாப்தத்தில் இருந்து வருகின்றன.

2022 பெப்ரவரியில் மொஸ்கோ தனது இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து உக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகள் ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாயைக் குறைக்க முயன்றுள்ளன.

ஆனால் ரஷ்யா ஐரோப்பாவிலிருந்து இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிசக்தி விற்பனையைத் திருப்பிவிட முடிந்தது.

இதன் மூலம் பல பில்லியன் டொலர் நிதி ஓட்டம் தொடர்கிறது.

மோதல் வெடித்த பிறகு பாரம்பரிய விநியோகங்கள் ஐரோப்பாவிற்கு திருப்பி விடப்பட்டதால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததாக இந்தியா கூறியது.

இதனிடையே, உக்ரேன் மீதான தாக்குதலுக்கு மத்தியில் புட்டின் தனது வெளிநாட்டு பயணத்தை கணிசமாகக் குறைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

நன்றி

Leave a Reply