டெல்லி கார் வெடிவிபத்து   – ராமநாதபுர  கடலோரப் பகுதிகள்  – சுற்றுலாத் தளங்களில் உச்சகட்ட பாதுகாப்பு:

 
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்ததுடன் 24 போ் காயமடைந்த  சம்பவத்தை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில்  ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியில் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில்  பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களில்  ஆயுதம் ஏந்திய  காவல்துறையினா்  வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்ப நாய்களின்  உதவியுடன்   தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உலகப்பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா ஆகிய இரண்டும்  வெளி மாநிலங்களை சேர்ந்த அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதி என்பதால் ராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் அரசு விடுதிகளில் 12 குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள நபர்களை விலாசம் மற்றும் அவர்களின் ஆதார் எண் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு அறையிலும் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளிடம்    காவல்துறையினா் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  வெடிவிபத்து ஏற்பட்ட  ஹுண்டாய் ஐ-20  எனும்  காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது பயங்கரவாத  வெடிகுண்டு தாக்குதலா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply