அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நீண்ட நாள்ஆசையான பெல்ரூம் கட்டும் பணிக்காக வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்படுகின்றது.
சர்வதேச தலைவர்கள் உடனான சந்திப்புகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக 2,200 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 90,000 சதுர அடி பரப்பளவில் பெல்ரூம் கட்டப்படுகின்றது.
இதற்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடிக்கும் பணியானது நேற்று (20) ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு ஜனாதிபதிகள் வரலாற்று சிறப்புமிக்க இல்லமாக திகழும் வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதி கட்டிடம் 1902ம் ஆண்டு கட்டப்பட்டது.
இறுதியாக 1942ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், வெள்ளை மாளிகையின் ஒருபகுதி இடிக்கப்பட்டு பால் ரூம் அமைக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் அவரின் ஆசையை பூர்த்தியாக்கும் விதத்தில் அதற்கான கட்டுமான பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ள.
இந்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ருத் பதிவில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் வளாகத்தில் புதிய, பெரிய மற்றும் அழகான பால்ரூம் கட்டும் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அழகாக, முழுமையாக நவீனமயமாக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் அந்தப்பதிவில் தெரிவித்துள்ளார்.
