தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவி, பல ஆயிரக்கணக்கான பேரிடர் பாதித்த குடும்பங்களுக்கு மிகத் தேவையான நிவாரணமாக அமையும். இது முதலாவது உதவி அல்ல என்பதை இலங்கை மக்கள் சார்பாக நான் குறிப்பிடுகின்றேன்.

இந்த மனிதாபிமான நடவடிக்கையில், 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா, 100 மெட்ரிக் தொன் மருந்துகள் ஆகிய பெரும் அளவிலான நிவாரண உதவிகளை தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் தமிழக அரசின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், தமிழக முதல்வரின் பார்வை மற்றும் மனிதாபிமானப் பணி நிறைவேற தமிழ்நாடு அரசு முழுமையாக ஒத்துழைக்கத் தயார் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிவாரண உதவியை சாத்தியமாக்குவதில் பல அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் ஒருங்கிணைப்பும் முக்கிய பங்கு வகித்தது

குறிப்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், திரு. முருகானந்தம், IAS, தமிழக பொதுச் செயலாளர் திருமதி ரீதா ஹரிஷ், IAS, தமிழக அரசின் வெளிநாட்டு தமிழர் நல ஆணையகத்தின் ஆணையாளர் திரு. வள்ளலார், IAS மற்றும் குழு உறுப்பினர்களான அப்துல்லா மற்றும் திரு. புகழ் காந்தி – NRT ஆகியோரின் பங்களிப்பு சிறப்பானதாக அமைந்தது.

இதேவேளை, இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கும் இலங்கை சார்பாக சிறப்பு நன்றியை தெரிவிக்கின்றேன்.

இந்த நேரத்தில் விரைவான நடவடிக்கைகளை எடுத்த இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகர் வைத்தியர் கணேசநாதன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்றி

Leave a Reply