தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளன. தமிழரசுக் கட்சியின் கையெழுத்து இல்லை என்பது அடிப்படையில் ஒரு பலவீனம். அதேசமயம் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்ற முடிவை அறிவித்த பொழுது சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின்படி தமிழரசுக் கட்சியானது மனித உரிமைகள் பேரவையோடு தனிக் கட்சியாக என்கேஜ் பண்ணப் போகிறது என்று தெரிகிறது.
இந்த நிலைப்பாடு, தன்னை ஒரு பெரிய அண்ணனாகக் கருதும் மனோ நிலையில் இருந்துதான் தோன்றுகிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி அவ்வாறான மூத்த அண்ணன் மனோநிலையைத் தொடர்ந்து பேணி வருகிறது. கடந்த 16 ஆண்டு காலத்தில் தமிழ் அரசியலில் ஏற்பட்ட தேக்கங்களுக்கும் தோல்விகளுக்கும் அதுதான் பிரதான காரணம்.
கடிதத்தில் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு அவர்கள் வேறு காரணங்களைக் கூறக்கூடும்.உதாரணமாக முன்னணி தான் ஒரு கடிதத்தைத் தயாரித்து விட்டு அதில் கையெழுத்து போடுமாறு தங்களைக் கேட்டது என்ற ஒரு குற்றச்சாட்டு.இரண்டாவது குற்றச் சாட்டு, கடிதத்தின் வரைவை முன்னணி கட்சித் தலைமைக்கு அனுப்பியதோடு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அனுப்பியதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சிக்கு மாறாக முடிவு எடுக்கத் தூண்டும் உள்நோக்கம் அவர்களிடம் இருந்தது என்ற சந்தேகம்.
மூன்றாவது குற்றச் சாட்டு, கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையெழுத்திடுமா இல்லையா என்ற விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் உள்நோக்கம் முன்னணியிடம் இருந்தது என்ற சந்தேகம்.அந்த சந்தேகத்தை பலப்படுத்தும் விதத்தில் முன்னணியின் மேடைப் பேச்சுகளும் சமூகவலைத்தள உரையாடல்களும் காணப்பட்டமை. அதாவது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்களுடைய கோரிக்கைகளுக்கு எதிராகத் துரோகம் செய்யும் ஒரு கட்சியாகச் சித்தரிக்கும் விதத்தில் விமர்சனங்களை முன்வைத்தமை என்ற குற்றச்சாட்டு.
இக் குற்றச்சாட்டுகளில் ஓரளவுக்கு உண்மை உண்டு. ஆனாலும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு பிரதான காரணம் கடந்த 16 ஆண்டுகளாக இருந்துவரும் அதே காரணம்தான். அதாவது தானே பெரிய கட்சி, தானே முதன்மைக் கட்சி என்ற நினைப்பு.
அவ்வாறு நினைக்கத்தக்க பெரும்பான்மை அவர்களிடம் உண்டு என்பது உண்மை. ஆனால் தமிழ்த் தேசிய அரசியலானது கட்சி போட்டிகளுக்கூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய வழமையான,தொழில்சார் மிதவாத அரசியல் அல்ல. மாறாக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் அரசியல். இதில் வெளி உலகத்தை அணுகும் பொழுது தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக நிற்க வேண்டியது அவசியம். இந்த விடயத்தில் முதன்மைக் கட்சியாகவும் பிரதான கட்சியாகவும் காணப்படும் தமிழரசுக் கட்சிக்குத்தான் அந்தப் பொறுப்பு உண்டு. அவர்கள் தான் அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒரு மூத்த அண்ணனை போல ஏனைய கட்சிகளுக்கு வழிகாட்ட வேண்டும். ஐநாவைக் கையாளும் விடயத்தில் தாங்களே முன்கை எடுத்து விவகாரங்களைக் கையாள வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறிய ஒரு பின்னணிக்குள்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சிவில் சமூகங்களும் அந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன.
அதைவிட முக்கியமாக 2015 ஆம் ஆண்டிலிருந்து 18 ஆம் ஆண்டு வரையிலும் தமிழரசுக் கட்சி அந்த விடயத்தைப் பிழையாகக் கையாண்டது என்ற அனுபவம் உண்டு. ஐநாவின் 30/1 தீர்மானத்தின் பிரகாரம் நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டு தமிழரசுக் கட்சி, நிலைமாறு கால நீதியின் பங்காளியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செயற்பட்டது.ஆனால் அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று பின்னர் சுமந்திரன் கூறினார் என்பதை கடந்த வாரம் எனது கட்டுரையில் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.
எனவே தமிழரசுக் கட்சி ஐநாவைக் கையாள்வதில் ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதே சமயம் தமிழரசுக் கட்சி தவறு விடுகிறது என்று கூறிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உருப்படியாக எதையும் செய்திருக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதும்போது அந்தக் கடிதத்தின் பிரதான கோரிக்கைகளை முன்மொழிந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பது முதலாவது பிரதான கோரிக்கை.இரண்டாவது, உருவாக்கப்படும் விசாரணை பொறிமுறையானது காலவரையறைக்குட்பட்டு இயங்க வேண்டும் என்பது.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளிலும் இந்தக் கோரிக்கைகளை நோக்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த அளவுக்கு உழைத்திருக்கிறது? மனித உரிமைகள் பேரவைக்குள் இருந்து இலங்கை இனப்பிரச்சினையை ஐநா பொதுச் செயலர் மீண்டும் பொதுச் சபைக்கு பாரம்படுத்தி, அங்கிருந்து அதை பன்னாட்டு நீதிமன்றங்களுக்கு பாரப்படுத்தப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாகும். ஒரு கடிதம் எழுதினால் மட்டும் அதை ஐ நா செய்து விடாது. மாறாக ஐநாவில் தீர்மானங்களை எடுக்கும் நாடுகளை நோக்கி லொபி செய்ய வேண்டும்.அதற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த விடயத்தில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது?
இதுதான் பிரச்சினை. தமிழரசுக் கட்சி போகிற வழி பிழையானது என்றால் சரியான வழியைக் காட்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அந்த வழியில் தன்னையும் கட்டியெழுப்பி தமிழ் மக்களையும் கட்டியெழுப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை
எனவே ஐநாவைக் கையாளும் விடயத்தில் இரண்டு பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளும் வெவ்வேறு விகிதத்தில் பிழை விட்டிருக்கின்றன. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒப்பீட்டளவில் சரியான விளக்கங்களோடும் சரியான கொள்கை முடிவுகளோடும் காணப்படுகின்றது.ஆனால் அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களிடம் உழைப்பு இல்லை.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பும் விடயம் விவகாரமாக மாறியது.இந்த விடயத்தில் சிவில் சமூகங்களின் பங்களிப்பைப் பற்றியும் சொல்ல வேண்டும். சிவில் சமூகங்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியிடம் ஒருவித ஒவ்வாமை உண்டு. இது சம்பந்தரின் காலத்தில் இருந்தே தொடங்குகின்றது. அதற்கு ஆழமான ஒரு காரணம் உண்டு.
2010இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின் அப்பொழுது காணப்பட்ட சிவில் சமூகங்கள் பெருமளவுக்கு முன்னணிக்கு ஆதரவாகக் காணப்பட்டன.எனவே அதன் தர்க்கபூர்வ விளைவாக அவை சம்பந்தருக்கு எதிராகவும் காணப்பட்டன. இந்தப் போக்கை இன்னும் ஆழமாகப் பார்த்தால் அப்பொழுது காணப்பட்ட சிவில் சமூகங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பலப்படுத்தும் நோக்கிலானவை என்றுதான் கூறலாம்.
மறைந்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களை இணைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் சிவில் சமூக அமையம்,2015ல் இருந்து செயற்பட்ட தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றை இங்கு சுட்டிக்காட்டலாம்.
இதனால் சிவில் சமூகங்கள் தொடர்பில் சம்பந்தரிடம் ஒருவித ஒவ்வாமை உணர்வு இருந்தது.2013ஆம் ஆண்டு முதன்முதலாக கூட்டமைப்பையும் முன்னணியையும் ஒரே அரங்கினுள் கொண்டு வந்த, மன்னாரில் இடம் பெற்ற சந்திப்பின்போது அதற்குத் தலைமை தாங்கிய முன்னாள் மன்னார் ஆயரை நோக்கி சம்பந்தர் என்ன சொன்னார்? “பிஷப் நீங்கள் சொல்லுங்கோ. ஆனால் முடிவெடுக்கப் போறது நாங்கள்தான்” என்று சொன்னார்.
இந்த நிலைப்பாடுதான் இன்றுவரை தமிழரசுக் கட்சியிடம் உள்ளது. குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் பொது வேட்பாளரின் விடையத்திலும் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் சுமந்திரன் அணியானது பொது வேட்பாளரை ஒரு பொது எதிரிபோல பார்த்தது.பொது வேட்பாளரை முன்னிறுத்திய சிவில் சமூகங்களை ஒவ்வாமை உணர்வோடு மட்டுமல்ல பகை உணர்வோடு அணுகியது.சுமந்திரன் பகிரங்கமாக மேடைகளில் சிவில் சமூகத்தைத் தாக்கிப் பேசினார். இத்தனைக்கும் அவர் மேடை ஏறி ஆதரித்த சஜித் பிரேமதாச ஐநா மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு எதிரான நிலைப்பாட்டோடு காணப்பட்டார்.
சிவில் சமூகங்கள் தங்களுடைய பெரிய அண்ணன் மனோநிலையை கேள்விக்கு உள்ளாக்குகின்றன என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பலவீனமடையும் பொழுது சிவில் சமூகங்கள் முன்னணியைப் பலப்படுத்துகின்றன என்றும் தமிழரசுக் கட்சி கருதுகின்றது.
2019இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் பேரவை ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கியது.ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கனவு அப்பொழுதுதான் செய்முறைக்கு வந்தது.ஆனால் அந்தச் சுயாதீனக் குழுவை சம்பந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை மட்டுமல்ல, யாழ்ப்பாணம் சின்மயா மிஷினில் நடந்த ஒரு சந்திப்பின்போது சிவிகே சிவஞானம்,சிவில் சமூகப் பிரதிநிதிகளைப் பகை உணர்வோடு அணுகினார்.
எனவே தமிழரசுக் கட்சி கடந்த 16 ஆண்டுகளிலும் சிவில் சமூகங்களை சந்தேகத்தோடு பார்க்கின்றது.அவை தன்னுடைய முதன்மையைக் கேள்விக்குள்ளாக்கி, முன்னணியைத் தமக்கு எதிராகப் பலப்படுத்துகின்றன என்ற பயம் அவர்களுக்கு உண்டு.அதே பயந்தான் கடந்த வாரம் அனுப்பப்பட்ட கடித விடயத்திலும் அவர்கள் எடுத்த முடிவின் மீது அதிகம் செல்வாக்கு செலுத்தியதா?
ஒரு பெரிய கட்சி,மூத்த கட்சி சிவில் சமூகங்கள் தொடர்பாக அவ்வாறான ஒவ்வாமை உணர்வோடும் விரோத உணர்வோடும் காணப்படுவது என்பது தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிந்த போக்கைக் காட்டுகின்றது.பொதுவாக சிவில் சமூகங்கள் ஏன் அரசியலில் நேரடியாகத் தலையிடும் நிலைமை ஏற்படுகின்றது? அரசியல் கட்சிகள் தங்களுக்குரிய பொறுப்பை உணர்ந்து வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளத் தவறும் போதுதான், சிவில் சமூகங்கள் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்ய வேண்டி வருகிறது. ஆனால் அந்தத் தார்மீகத் தலையீட்டை தமிழரசுக் கட்சி ஒரு தொந்தரவாக,ஒரு வில்லங்கமாக ஏரிச்சலோடு பார்க்கின்றதா?