தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மை எட்டுபட்டுள்ளது – ஜனாதிபதி

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மை எட்டுபட்டுள்ளதால், அந்த வலுவான அடித்தளத்தில் பொருளாதார வளர்ச்சியை அடைவதன் மூலமும் புதிய பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதன் மூலமும் இலங்கையை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்லும் திட்டம் துரிதப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கு விளக்கிய ஜனாதிபதி, அந்த சவால்களுக்கு மத்தியிலும்  2026 வரவு செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவு கூர்ந்தார்.

நாட்டில் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சுங்கவரிச் சலுகைகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கை பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியைப் பேணுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இலங்கைக்கு  தொடர்ந்து கிடைக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இதுவரை இலங்கைக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டுக்குக் கிடைக்கும்  பொருளாதார வளர்ச்சியின் அனைத்து பயன்களையும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வலியுறுத்தினார்.

இலங்கையை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட உறுதிப்பாட்டைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இலங்கையை உலகளவில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் தேவையான ஆதரவை வழங்கவும் உடன்பாடு  தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply