
இந்தியாவில் தலைசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயிர் காக்கும் இரத்த மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளமை பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள், நாட்டின் இரத்த தான மற்றும் பரிசோதனை நடைமுறைகள் குறித்து தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில், 3 முதல் 15 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது எச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற ஒரு சம்பவம் சில வாரங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்திலும் பதிவாகியது. அங்கு அரசு மருத்துவமனையில் இரத்தம் ஏற்றப்பட்ட 8 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தலைசீமியா என்பது மரபணு சார்ந்த இரத்தக் கோளாறாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான இரத்த சோகையை கட்டுப்படுத்த அடிக்கடி இரத்த மாற்றங்கள் அவசியமாகின்றன. சத்னா மாவட்ட ஆட்சியர் சதீஷ் குமார், பாதிக்கப்பட்ட குழந்தைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரத்தம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசு விதிமுறைகளின்படி இரத்தம் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே வழங்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கினாலும், எச்ஐவி தொற்றின் ஆரம்ப கட்டமான ‘விண்டோ பீரியட்’ நிலையில் இருக்கும் கொடையாளர்களின் இரத்தம் சில சமயங்களில் சோதனையில் கண்டறியப்படாமல் போக வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு சம்பவத்தில் குழந்தையின் பெற்றோர் இருவரும் எச்ஐவி பாதிப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய வழக்குகளில் பெற்றோருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஓர் ஆய்வக உதவியாளர் மற்றும் சில மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
இந்த நோய்த்தொற்று குழந்தைகளின் உடல்நலத்தையே அல்லாமல், சமூக ரீதியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டில், ஒரு சிறுவனுக்கு எச்ஐவி இருப்பது தெரிந்தவுடன், அவர்களின் வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியதால், அந்த விவசாயக் குடும்பம் தங்கள் சொந்த கிராமத்திற்குத் திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் பாதுகாப்பான இரத்த தான நடைமுறைகளை உறுதி செய்ய, தேசிய இரத்த மாற்ற மசோதா 2025-ஐ இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
