தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது
தாய்லாந்து – கம்போடியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற எல்லை மோதல்களுக்குப் பின்னர் , பிராந்திய அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை, குறித்த பேச்சவார்த்தையில் அமைதியான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், கம்போடியா, நீண்டகாலமாக நிலவும் சர்ச்சைக்கு அமைதியான தீர்வைக் காண விரும்புவதாக தெரிவித்தது.
இதேவேளை, தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே ப்ரே விஹார் கோயில் அமைந்துள்ள எல்லைப் பகுதியில் நடந்த மோதல்களால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இதனடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை சிறப்பு கூட்டத்திற்குப் பின்னர், கம்போடியா உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
எனவே இவ்வாறான நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர மலேசிய பிரதமர் தலைமையில் கம்போடியா- தாய்லாந்து பிரதமர்களுடன் இன்று கோலாலம்பூரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
குறித்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளைய தினம் (29) கம்போடியா மற்றும் தாய்லாந்து தரப்புகளின் பிராந்திய தளபதிகளின் கூட்டம் ஒன்றையும் மேற்கொள்ளஉள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.