தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இன்று (03) காலை சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று, அரசு நடத்தும் வீதிப் போக்குவரத்துக் கழக பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த துயரச் சம்பவத்தில் மூன்று மாதக் குழந்தை உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.
மற்றும் பலர் காயமடைந்தனர்.
70 பயணிகளுடன் தந்தூர் டிப்போவைச் சேர்ந்த பேருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி இந்த விபத்து நிகழந்துள்ளது.
மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் லொறிரியன் சரளைக் கற்கள் பேருந்து மீது விழுந்து பல பயணிகள் கீழே சிக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடம் மனதைப் பிளக்கும் காட்சியாக இருந்ததாகவும், உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்க விரைந்து வந்தபோது பயணிகள் உதவிக்காக அலறி அழுததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் செவெல்லா அரசு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் ஹைதராபாத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து, ஹைதராபாத்-பிஜாப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது, செவெல்லா-விகாராபாத் பாதையில் நீண்ட வாகனங்கள் வரிசையில் நின்றமையும் குறிப்பிடத்தக்கது.
