கடலூர்: ஊராட்சி மன்ற தேர்தலின் போது நடைபெற்ற கொலை தொடர்பான வழக்கில், கடலூர் நீதிமன்றம் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில். கடலூர் வட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராமச்சந்திரன், ரவி ஆகியோர் போட்டியிட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன், ராமச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். தேர்தலில் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். இதனால் ராமச்சந்திரன் ஆதரவாளர் ஜனார்த்தனனுக்கும், ரவி ஆதரவாளர் குமார் என்பவருக்கும் முன்விரோதம் உருவானது.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி ஜனார்த்தனன், அவரது ஆதரவாளர் கமலக்கண்ணன் (40) என்பவருடன் அதே பகுதியில் பேசிக்கொண்டிந்தார். அப்போது அங்கு வந்த குமாருடன் தகராறு ஏற்பட, இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பைச் சேர்ந்த ஜனார்த்தனன், கமலக்கண்ணன், சிவா, ஜெயசீலன் உட்பட 7 பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலக்கண்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் நீதிபதி சரஸ்வதி நேற்று தீர்ப்பளித்தார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குமார் (48), வெங்கடேசன் (32), மணியரசன் (29), கிருஷ்ணராஜ் (53), சிலம்பரசன் (28), வினோத்குமார் (28), பாரதிதாசன் (28), அரவிந்த் (30), பரத்ராஜ் (30) ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், தலா ரூ.3,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வழக்கில் தொடர்புடைய சிவராமன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சிலம்பரசன் பாகூரில் 2022-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் கடலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு,பின் காலாப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். தண்டனை பெற்ற மற்ற 8 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.