49
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவித்து, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். நாக விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியைச் சந்தித்த போதே அவர் இவ்விடயத்தை முன்வைத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதுடன், மக்கள் மற்றும் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி விரைவான தீர்வை எட்டுவதாக உறுதியளித்துள்ளார்.
“இந்த காணிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதியே இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்” என விகாராதிபதி தெளிவுபடுத்தினார்.
வடபகுதி இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகளுக்கு தீர்வாக, வடக்கு மாகாணத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வுகாணப்பட வேண்டும் என்பதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.
