88
“நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை. அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை”. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கமோ “இதோ உங்களுக்கு விளையாட்டு மைதானம்; இதோ உங்களுக்கு மயிலிட்டித் துறைமுகம்; இதோ உங்களுக்கு வட்டுவாகல் பாலம்” என்றிவ்வாறாக அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கின்றது.
அனுர அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இந்த மாதத்தோடு ஒராண்டு முடிகிறது. பதவியேற்ற ஓராண்டு காலப் பகுதிக்குள் வடக்கிற்கு அதிக தடவைகள் வருகை தந்த ஒரே ஜனாதிபதியாக அவர் காணப்படுகிறார்.கடந்த கிழமை அவர் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடக்கி வைத்துள்ளார்.இடையில் ஒரு சாகசப் பயணமாக கச்சதீவுக்கும் போய் வந்திருக்கிறார்.
கடந்த ஓராண்டு கால பகுதிக்குள் வடபகுதிக்கு மட்டும் 1250 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் முல்லைத்தீவில் வைத்துச் சொன்னார்.கடந்த கிழமை வடக்கில் அவர் மண்டை தீவில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான அடிககல்லை நாட்டினார்.மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திக்கான வேலைகளையும் தொடக்கி வைத்தார்.யாழ்.நூலகத்தை டிஜிட்டல் தளத்தில் நுகர்வதற்குரிய வேலைகளையும் தொடக்கி வைத்தார்.யாழ்ப்பாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.வன்னியில் தெங்கு முக்கோணத் திட்டம் ஒன்றை தொடக்கி வைத்தார்.வவுனியாவில் 7 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த மத்திய பொருளாதாரம் மையத்தைத் திறந்து வைத்தார்.முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.”உங்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு.அந்தப் பொறுப்பை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று முல்லைத்தீவில் வைத்து அனுர கூறினார்.
அபிவிருத்தி வேண்டும்.அதில் சந்தேகமில்லை. போரால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்கள் தொடர்ந்து அந்த பாதிப்பில் இருந்து விடுபடாதவர்களாக காணப்படுகிறார்கள்.அவர்கள் தங்களைப் பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டும். எனவே அபிவிருத்தி வேண்டும்.
ஆனால் தமிழ் மக்கள் போராடியது அபிவிருத்திக்காக அல்ல.அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளுக்காகத்தான். அபிவிருத்தி என்பது ஒரு சமூகம் அதன் நோக்கு நிலையில் இருந்து செய்ய வேண்டியது.அது அதன் நோக்கு நிலையிலிருந்து அபிவிருத்தியைத் திட்டமிடுவதற்கு அவசியமான கூட்டு உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.ஆனால் தனது கடலின் மீதும், துறைமுகங்களின் மீதும்,காட்டின் மீதும்,நிலத்தின் மீதும் அதன் வளங்களின் மீதும் அதிகாரத்தைக் கொண்டிராத ஒரு மக்கள் கூட்டமானது தனக்குரிய அபிவிருத்தியைத் தானே திட்டமிட முடியாது.
அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்தாமல் அபிவிருத்தியை முன்னெடுப்பது என்பது இனப்பிரச்சினையை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக வியாக்கியானப்படுத்தும் ஓர் உத்திதான்.
எதை அபிவிருத்தி செய்வது? எப்பொழுது செய்வது? எப்படிச் செய்வது? யாரிடம் உதவி எடுப்பது? போன்ற எல்லாவற்றையும் திட்டமிடுவதற்கும் செயற்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு உரிய கூட்டுஉரிமைகள் வேண்டும். அந்தக் கூட்டு உரிமைகள் அதாவது அரசியல் உரிமைகளைக் கேட்டுத்தான் தமிழ் மக்கள் போராடினார்கள்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும் வரையிலும் அதாவது தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் உறுதி செய்யப்படும் வரையிலும் அபிவிருத்தியைச் செய்யாமல் இருக்க முடியாது என்பதனை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தமிழ்மக்கள் தமது கூட்டுரிமைக்கான கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடம் எப்பொழுதும் இருக்கும்.
அனுர அவருடைய யாழ்ப்பாண விஜயத்தின்போது தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு தெரியாமல் தனது நண்பர் ஒருவரின் வீட்டில், தட்டாதெருவில் தங்கியிருக்கிறார்.இதற்கு முதல் முறை யாழ்ப்பாணம் வந்த பொழுது அவர் குருநகர் மத்தியூஸ் வீதியில் உள்ள க்யூடெக் அலுவலகத்திற்கு சற்று நேரே உள்ள ஒரு நண்பரின் வீட்டில்தான் இளைப்பாறிக்,குளித்து உடைமாற்றிக் கொண்டு சாப்பிட்டார்.கடந்த கிழமை புதுக்குடியிருப்புக்குச் சென்ற போது அங்கே தன்னுடைய கட்சிக்காக உழைக்கும் ஒருவருடைய வீட்டில் மதிய உணவை எடுத்தபின் அந்த வீட்டுக் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொண்டு ஒரு படம் எடுத்துக் கொண்டார்.பொதுவாக வடக்குக்கு வரும் ஜனாதிபதிகள் இங்குள்ள உயர்தர விடுதிகளில்தான் தங்குவார்கள். பாதுகாப்பு ஒரு காரணமாகக் கூறப்படும். ஆனால் அனுர தன் பழைய நண்பர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளில் தங்குகிறார்;உணவருந்துகிறார்; குளித்து உடுப்பு மாற்றிக் கொள்கிறார்.சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு எளிமையான,எளிதில் கிடைக்கக்கூடிய தலைவர் என்ற அபிப்பிராயம் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டு விட்டது.தமிழ் மக்கள் மத்தியிலும் அப்படி ஒரு பிம்பத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்.
அவர் எந்தப் பிம்பத்தை கட்டியெழுப்பினாலும் இறுதியாக நிலைக்கப் போகும் பிம்பம் எது என்பதை இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வு எது என்பதுதான் தீர்மானிக்கப் போகிறது.
தேசிய மக்கள் சக்தி,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை அதன் தேர்தல் பிரச்சாரங்களிலும் அதன் தேர்தல் அறிக்கையிலும் காண முடிந்தது.தமிழ் மக்களை ஒரு தேசிய இனமென்று ஏற்றுக்கொண்டால்தான் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்களைத் தாங்களே அபிவிருத்தி செய்யத் தேவையான கூட்டு உரிமைகளை ஏற்றுக்கொள்ளலாம்.
உதாரணமாக மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்கம்.மயிலிட்டித் துறைமுகம் எனப்படுவது ஒரு காலம் இலங்கைத்தீவின் முன்னணி கடல் வாணிபத் துறைமுகமாக விளங்கியது.தமிழ் மக்கள் நீண்ட கடல் எல்லையைக் கொண்டவர்கள்.போருக்கு முன்பு தீவின் மொத்தக் கடலுணவில் கிட்டத்தட்ட 40 விகிதம் வடக்கிலிருந்தே கிடைத்தது.வடக்கில் மயிலிட்டிதான் முன்னணித் துறைமுகமாகக் காணப்பட்டது.போரில் அது உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் விழுங்கப்பட்டது. விளைவாக மயிலிட்டி அதன் சோபையை, பொலிவை இழந்து விட்டது.அதன் மக்கள் இடம்பெயர்ந்து,புலம்பெயர்ந்து மெலிந்து போய்விட்டார்கள். தொடர்ச்சியான இடப்பெயர்களால் ஒரு தலைமுறை அதன் பாரம்பரிய தொழில் தொடர்ச்சியை,தொழில் திறன்களின் தொடர்ச்சியை இழந்து வருகிறது. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்தியை ஜனாதிபதி தொடக்கி வைத்திருக்கிறார்.
.
ஆனால் மயிலிட்டி அமைந்திருக்கும் அதே பிரதேசத்தில் சில கிலோமீட்டர் தொலைவில்தான் தையிட்டி அமைந்திருக்கிறது.அங்கு கட்டப்பட்டிருக்கும் ஒரு விகாரையானது சிங்கள பௌத்த மயமாக்கலின்,நிலப் பறிப்பின் ஆகப்பிந்திய குறியீடாக நிற்கிறது.தையிட்டி விகாராதிபதி மயிலிட்டியில் நடந்த வைபவத்துக்கு வருவாராக இருந்தால் அது ஒரு விவகாரமாக மாறும் என்று கருதியதனால் அந்த வைபவத்துக்கு எந்த மதத் தலைவர்களும் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.ஆனால் மண்டைதீவில் வைத்து அனுர தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
மயிலிட்டியில் அபிவிருத்தி;தையட்டியில் நிலப்பறிப்பும் சிங்கள பௌத்தமயமாக்கலும்.இது தற்செயலான முரண்பாடு அல்ல.இவை இரண்டுமே ஒரே நோக்கத்தை கொண்ட அரசு இயந்திரத்தின் இரு வேறு செயற்பாடுகள்தான்.ஒன்று வெளிப்படையாக ஆக்கிரமிப்பைச் செய்கின்றது.தமிழ் மக்களுக்கு அவர்களுடைய நிலத்தின் மீதும் கடலின் மீதும் உரிமை இல்லை என்பதனை அது நிரூபிக்கின்றது.இன்னொன்று தமிழ் மக்களை அபிவிருத்திக்குள் கரைத்து விட முயற்சிக்கின்றது.அதனால்தான் திரும்பத்திரும்பக் கூறவேண்டியிருக்கிறது,தமிழ் மக்கள் கேட்பது அபிவிருத்தியை அல்ல.அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளை என்று.
கடந்த வாரம் அனுர யாழ்ப்பாணத்தில் நின்ற அன்று செம்மணியில் ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.செம்மணிப் புதைகுழியை உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு களமாக அரசாங்கம் கையாண்டு வருகிறது.புதுக்குடியிருப்பில் அனுர ஒரு சிறு பிள்ளையைத் தூக்கி வைத்துக்கொண்டு படம் எடுத்திருக்கிறார்.அதுபோல ஒரு சிறு பிள்ளையை அணைத்தபடி செம்மணியில் ஒரு தாய் புதைக்கப்பட்டார். அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் நீதி கிடைத்தால்தான் புதுக்குடியிருப்பில் அனுர எடுத்த படத்துக்கு ஒரு வரலாற்றுப் பெறுமதியிருக்கும். இல்லையென்றால் அது வரலாற்றின் குப்பை கூடைக்குள் எறியப்பட்டுவிடும். ஏனென்றால் “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி” என்று மார்க்சிஸ்டுக்கள் கூறுவார்கள்.