வாஷிங்டன்: நவம்பர் 1 அல்லது அதற்கு முன்பாக, சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சீனாவில் பல விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. உலகின் அனைத்து நாடுகளுக்கும் அவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதில், அரிய மண் தாதுக்களைக் கொண்ட சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்படாத பொருட்கள்மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு விஷயத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இது சந்தைகளை அடைத்துவிடும். உலகின் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் இது வாழ்க்கையை கடினமாக்கும்.
சீனாவின் இந்த கடிதத்தால் மிகவும் கோபமடைந்துள்ள பல நாடுகள் எங்களை தொடர்பு கொண்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களாக சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதனால், சீனாவின் இந்த வர்த்தக நடவடிக்கை எங்களுக்கு கூடுதல் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சீனா, உலகை சிறைப்பிடித்து வைத்திருக்க அனுமதிக்கப்படக்கூடாது. ஆனால், இதுவே அவர்களின் நீண்ட கால திட்டமாகத் தெரிகிறது. காந்தங்கள் மற்றும் பிற தாதுக்களை அவர்கள் மிகப் பெரிய அளவில் குவித்து வைத்திருக்கிறார்கள். இவ்விஷயத்தில், அமெரிக்கா வலுவான ஏகபோக நிலையைக் கொண்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்த நான் முடிவு செய்யவில்லை.
வழக்கமாக இருந்த விஷயங்கள் இனி வழக்கமாக இருக்காது. இது தொடர்பாக நான் சீன அதிபரிடம் பேசவில்லை. ஏனெனில், பேசுவதற்கு எதுவும் இல்லை. இது எனக்கு மட்டுமல்ல, உலகின் அனைத்துத் தலைவர்களுக்கும் ஆச்சரியம்தான்.
இன்னும் இரண்டு வாரங்களில் தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க இருந்தேன். ஆனால், இப்போது அதற்கு எந்த அவசியமும் இல்லை. மத்திய கிழக்கின் மூவாயிரம் ஆண்டுகால மோதல் மற்றும் சண்டை முடிவுக்கு வந்து அமைதி திரும்பிய நாள் இது. இந்த நாளில் சீன கடிதங்கள் பொருத்தமற்றவை.
இந்த விஷயம் தொடர்பாக சீனா என்ன சொல்கிறது என்பதைப் பொருத்து, அமெரிக்க அதிபராக எனது நடவடிக்கை இருக்கும். ஏகபோகமாக அவர்களிடம் என்ன இருக்கிறதோ, அது அமெரிக்காவிடம் இரண்டு மடங்காக இருக்கிறது. இப்படி நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், அதற்கான நேரம் வந்துவிட்டது.
வேதனையாக இருந்தாலும் இது அமெரிக்காவுக்கு நல்ல விஷயமாகவே இருக்கும். தற்போதைய நிலையில், நாங்கள் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை, சீன பொருட்கள் மீதான வரிகளை அதிகரிப்பது. இதேபோல், வேறு சில எதிர் நடவடிக்கைகளும் தீவிர பரிசீலனையில் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், நவம்பர் 1 முதல் அல்லது அதற்கும் முன்பாக (சீாவின் நடவடிக்கையைப் பொறுத்து) அமெரிக்கா சீன பொருட்களுக்கு கூடுதலாக 100% வரியை விதிக்கும். ஏற்கனவே அவர்கள் செலுத்தும் வரியில் இது கூடுதல் வரியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே சீன பொருட்களுக்கு அமெரிக்கா 30% வரி விதித்துள்ளது. அது தற்போது 130% ஆக உயர இருக்கிறது.