நாட்டை அழிக்கின்ற சமூக விரோதிகளை சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கி வளமான நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதிப்பாட்டை, தேரர்கள் முன்னால் சத்தியம் செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் பதவிக்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உப பீடாதிபதி, நாரம்பனாவே ஆனந்த தேரருக்கான, ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை வழங்கும் அரச நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருந்தார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கண்டியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த தலதா மாளிகையின் ‘மகுல் மடுவ’ மண்டபத்தில் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வை முன்னிட்டு கண்டி நகரில் சிறப்பு போக்குவரத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டிருந்தன.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ” எங்களுடைய சமூகம் தற்காலத்தில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை, பொருளாதாரத்தை, அபிவிருத்தி பணிகளை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
அதேநேரம் நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டாலும் அதனை மீண்டும் எழ வைக்க எம்மால் முடியும். பல தடவைகள் எமது சமூகம் இவ்வாறான பாரிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நல்லது எது கெட்டது என்பதை இனங்கானக்கூடிய ஒரு தருணமும் வாய்ப்பும் மலர்ந்துள்ளது.
வீழ்ச்சியடைந்த சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், ஒழுக்கமான நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் மகா சங்கத்தினரின் தலைமையிலான மதஸ்தலங்களுக்கு மிகப்பெரிய மற்றும் அசைக்க முடியாத பொறுப்பு உள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் சாதனைகள் எவ்வளவு எட்டப்பட்டாலும், நல்ல சமூகம் உருவாக்கப்படாவிட்டால், அவை எதுவும் பயனளிக்காது.
நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள சமூகக் கட்டமைப்பை சட்டத்தின் மூலம் மட்டும் சீர்படுத்த முடியாது. நாட்டில் கருணையுள்ள சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இன்று நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்ட்ட ஒரு அரசாங்கத்தை கொண்ட நாட்டில் இருக்கிறோம் இன்னொருபுறம் மோசமான நாட்டை அழிவுபாதைக்கு கொண்டு செல்லும் சமூகத்தினரும் இருக்கிறார்கள். நாங்கள் ஒரு முடிவினை எடுத்தோம், இதற்கு என்ன செய்வது ஒன்று நாட்டை அழிக்கும் சமூகத்தினரோடு சேர்ந்து நாங்கள் எங்களுக்கான வளமான நாட்டை கொண்டு செல்வது, இல்லையென்றால் சட்டதிட்டத்தையெல்லாம் விடுத்து அவர்களோடு சேர்ந்து பயணிப்பது. அதுவும் இல்லையென்றால் நீதியையும் சட்டத்தையும் முறையாக நடைமுறைப்படுத்து.
இந்த மோசமான அரசியலை முழுமையாக இல்லாமல் செய்யவேண்டும். நான் நினைக்கிறேன் அந்த பாதையில் செல்வதற்கே எங்களுடைய அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள்.ஆகையால் சட்டம் ஒழுங்கை முறையாக அமுல்படுத்தி இந்த கூட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வோம். எந்தவித பாரபட்சமும் பாராமல் இவர்களுக்கு கடுமையாக தண்டணை கொடுத்து சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை வளமான தேசமான மக்களுக்கான சூபிட்சமான தேசமாக இந்நாட்டை மாற்றிக்காட்டுவோம் என்ற உறுதிப்பாட்டை உங்கள் முன்னால் நான் சத்தியம் செய்கின்றேன்