நோயாளியை ஏற்றிச்சென்ற விமானம் விபத்து – அதிலிருந்த 7 பேரும் உயிாிழப்பு

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம்    ராஞ்சியில் இருந்து புதுடெல்லிக்குத் தீக்காயமடைந்த நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற ‘ஏர் அம்புலன்ஸ்’ (Air Ambulance), ஜார்கண்டின் சத்ரா (Chatra) மாவட்டக் காடுகளுக்குள் விழுந்து நொறுங்கியதில் நோயாளி உட்பட 7 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான  Beechcraft C90 ரக விமானம் ராஞ்சி பிர்சா முண்டா விமான நிலையத்திலிருந்து இரவு 7:11 மணிக்கு புறப்பட்ட நிலையில் இரவு 7:34 மணிக்கு கொல்கத்தா கட்டுப்பாட்டு அறையுடன்  தொடா்பு கொண்டதன் பின்னா்  வாரணாசிக்கு தென்கிழக்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் விமானம் ரேடார் தொடர்பிலிருந்து மறைந்த நிலையில் சிமரியா (Simaria) பகுதிக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விமானம் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் பெட்ரோலிய விபத்தில் சிக்கி 63% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 41 வயது மதிக்கத்தக்க  நோயாளி, மருத்துவக் குழுவினர் மற்றும் விமானிகள் உட்பட மொத்தம் 7 பேர் இருந்தனர்.    தீக்காயங்களுக்குள்ளானவரை சிகிச்சைக்காக  டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  விமானத்தில் இருந்த ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாக சத்ரா மாவட்டத்தின் எஸ்பிடிஓ சுபம் கந்தேல்வால், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளாா்.

இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இது குறித்து உயர்மட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு அல்லது மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும், இது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply