ஹராரே விளையாட்டுக் கழகத்தில் நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை 2:0 என்று கணக்கில் கைப்பற்றியது.
போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்ம் பத்தும் நிஸ்ஸங்க 136 பந்துகளில் 122 ஓட்டங்களை எடுத்து தனது ஏழாவது ஒருநாள் சர்வதேச சதத்தை எட்டியமை விசேட அம்சமாகும்.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்து வீசுவதற்கு இலங்கை அணி தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பென் கரன் 95 பந்துகளில் 79 ஓட்டங்களை எடுத்து அந்த அணியின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பத்தும் நிஸ்ஸங்கவின் சதம் மற்றும் அணித் தலைவர் சரித அசங்கவின் 61 பந்துகளில் 71 ஓட்டங்கள் என்ற பெறுப்பான ஆட்டத்தினால் அற்புதமான சேஸங்கை இன்னிங்ஸில் மூன்று பந்துகள் (49.3) மீதமிருந்த நிலையில் நிறைவுக்கு கொண்டு வந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் ஆட்டநாயகனாகவும் பத்தும் நிஸ்ஸங்க தெரிவானார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியிலும் பத்தும் நிஸ்ஸங்க 76 ஓட்டங்களை எடுத்து இலங்கையின் வெற்றிக்கு பங்களித்திருந்தார்.
இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 சர்வதேச தொடர் புதன்கிழமை (03) ஹராரேவில் தொடங்கும்.