பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா – பாகிஸ்தான் இணைந்து தீவிரமாக செயல்பட முடிவு | U.S., Pakistan to deepen bilateral cooperation to tackle leading terrorist groups

இஸ்லாமாபாத்: முக்கிய பயங்கரவாத குழுக்களை எதிர்கொள்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளில் பாகிஸ்தான் – அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக அமெரிக்கா – பாகிஸ்தான் இடையே நேற்று (ஆக.12) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் பங்கேற்ற குழுவுக்கு அதன் வெளியுறவுத் துறையின் பயங்கரவாத எதிர்ப்புக்கான செயல் ஒருங்கிணைப்பாளர் கிரிகோரி டி லோஜெர்ஃபோ தலைமை தாங்கினார். பாகிஸ்தான் குழுவுக்கு, அந்நாட்டின் ஐநா சிறப்பு செயலாளர் நபீல் முனீர் தலைமை தாங்கினார்.

இரு குழுவினருக்கும் இடையே நடைபெற்ற நீண்ட நேர பேச்சுவார்த்தையை அடுத்து, கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தானும் அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்(பிஎல்ஏ), ஐஎஸ்ஐஎஸ் – கோராசன், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான அணுகுமுறைகளை வளர்ப்பது முக்கியம் என்பதை இரு நாடுகளும் உணர்ந்துள்ளன.

பிராந்தியம் மற்றும் உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் பெற்றுள்ள தொடர் வெற்றிகளை அமெரிக்கா பாராட்டுகிறது. மேலும், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான பயங்கரவாத தாக்குதல், குஸ்தாரில் பள்ளி பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு உள்ளிட்ட பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவிக்கிறது.

பயங்கரவாத அமைப்புகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை தடுப்பதற்கு வலுவான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் உணர்ந்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கில், ஐநா உட்பட உலக மன்றங்களில் நெருக்கமாகப் பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளும் ஈடுபாட்டுடன் செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் கடந்த சில மாதங்களில் இரண்டு முறை அமெரிக்காவுக்குச் சென்று இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இரு நாடுகளும் நெருக்கமாகச் செயல்படுவதற்கான முடிவு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply