63
தையிட்டி விகாரைக்கு முன்பாக அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பலாலி காவல்துறையினா் சட்டவிரோதமான முறையில் நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி , வலி. கிழக்கு பிரதேச சபை மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் என 15 பேருக்கு எதிராக பலாலி காவல்துறையினா் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , வழக்கில் சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மன்றில் முன்னிலையாளர்கள்.
சந்தேகநபர்கள் சார்பில் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் , மூத்த சட்டத்தரணிகளான என். ஸ்ரீகாந்தா , கலாநிதி கே. குருபரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் மன்றில் முன்னிலையாகி தமது கட்சிக்காரர்கள் சார்பில் சமர்ப்பனங்களை முன்னவைத்தனர்.
அதனை தொடர்பில் சந்தேக நபர்களை சொந்த பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பலாலி காவல்துறையினா் நீதிமன்ற நடவடிக்கைகளை சட்டவிரோதமான முறையில் ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறான நடவடிக்கைகளை ஆரம்பிக்க காவல்துறையினருக்கு உரித்து கிடையாது.
அமைதி வழி போராட்டங்களை முன்னெடுக்க இலங்கை அரசியலமைப்பில் , தீர்க்கப்பட பல வழக்குகளிலும் உரித்து கொடுக்கப்பட்டுள்ளது. போராட்ட காரர்களுக்கு காவல்துறையினா் பாதுகாப்பு வழங்கி உதவ வேண்டும்.
காவல்துறையினா் பொதுமக்களுக்கு இடையூறு எனும் காரணம் காட்டியே போராட்டங்களுக்கு தடை வாங்குகின்றனர். ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தும் போராட்டங்களுக்கு அவ்வாறு கூறி தடையுத்தரவுகளை பெற முடியாது என மன்றில் சட்டத்தரணிகளாகிய நாங்கள் சுட்டிக்காட்டினோம்
அத்துடன் காவல்துறையினா் தாங்களே வீதிகளை மறித்து வைத்திருந்த பின்னர் மக்கள் வீதியை மறித்ததாக தவறான தகவல்களை மன்றில் கூறியுள்ளார்கள். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த முறைமையும் தவறானது அதனையும் மன்றில் சுட்டிக்காட்டினோம் என மேலும் தெரிவித்தார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த சில மாதங்களாகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நயினாதீவு விகாராதிபதி முன்வைத்த சமரசத் திட்டத்தைத் தொடர்ந்து, இந்த விவகாரம் இப்போது சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

Tag Words: #MASumandiran #JaffnaCourt #ThaiyittyVihara #MallakamCourt #TamilRights #PoliceBrutality #LandRights #VelanSwamigal #BreakingNewsTamil #SriLankaPolitics
