சென்னை: பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றாக, தமிழகத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் குழு கடந்த 2022-ல் அமைக்கப்பட்டது. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டறிந்து, கல்விக் கொள்கையை இந்த குழுவினர் வடிவமைத்தனர்.
மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. 2024 ஜூலை 1-ம் தேதி தமிழக அரசிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். ‘‘மாநில கல்விக் கொள்கை அறிக்கையானது உயர்கல்வி, பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பள்ளிக்கல்விக்கான அறிக்கையை முதல்வர் வெளியிடுகிறார். இதில் சாத்தியம் உள்ள திட்டங்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்’’ என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.