வாஷிங்டன்: ‘‘இஸ்ரேலும் இந்தியாவும் சேர்ந்து பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்குவதற்கு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அனுமதிக்கவில்லை. இது மிகவும் அவமானகரமானது’’ என்று அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிஐஏ அதிகாரியாக பணியாற்றியவர் ரிச்சர்ட் பார்லோ. இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 1980-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக அணுஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியத்தை கஹுவா அணுசக்தி மையத்தில் செறிவூட்டும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக சந்தேகம் எழுந்தது. ஆனால், பாகிஸ்தான் கைகளில் அணுஆயுதம் இருப்பதை இஸ்ரேல் உட்பட பல நாடுகள் விரும்பவில்லை.
அதனால் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து கஹுவா மையத்தின் மீது தாக்குதல் நடத்தலாம் என்று பரிசீலிக்கப்பட்டது. அப்படி பாகிஸ்தான் அணு ஆராய்ச்சி திட்டத்தை தடுத்து விட்டால், உலகின் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கருதப்பட்டது.
ஆனால், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தாக்குதலுக்கு அனுமதி வழங்கவில்லை. இது அவமானகரமானது. கடந்த 1982 முதல் 85-ம் ஆண்டு வரையில் நான் அமெரிக்காவின் எந்த அரசு பொறுப்பிலும் இல்லை. அந்த கால கட்டத்தில்தான் பாகிஸ்தானின் அணுசக்தி மையத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு கடைசியில் கைவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒரு கட்டத்தில் எனக்கு ரகசியங்கள் தெரிய வந்தன. அதைப் பற்றி அப்போது நான் பேசவில்லை. ஏனெனில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டு விட்டதால் பெரிதாக பேச எதுவும் இல்லை. ஆனால், இந்திரா காந்தி மட்டும் அனுமதி அளித்திருந்தால், பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்திருக்கும். பாகிஸ்தான் அணு ஆயுதத்தை தயாரித்து விட்டால், அது ஈரானுக்கு கிடைத்துவிடும். அதை தடுக்க வேண்டும் என்றுதான் இஸ்ரேல் அப்போது திட்டமிட்டது.
மேலும் ஆப்கானிஸ்தானில் அப்போது சோவியத் யூனியனுக்கு எதிராக நடத்தி வரும் ரகசிய போர் சீர்குலைந்து விடும் என்று அமெரிக்கா நினைத்திருக்கும். அதனால், பாகிஸ்தான் அணு ஆராய்ச்சி மையத்தின் தாக்குதல் நடத்த அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் கூட கடுமையாக எதிர்த்திருப்பார். இவ்வாறு ரிச்சர்ட் பார்லோ கூறியுள்ளார்.பாகிஸ்தான் கடந்த 1998-ம் ஆண்டு அணுஆயுதத்தை முதல் முறையாகப் பரிசோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
