கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய பாதாள உலகக் குழுவினரைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதாள உலகக் குழுவினர் தொடர்பான எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்” என பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (28) அரசங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடத்திற்கு வரும் போது இந்த நாடு இருந்த நிலை பொருளாதார பிரச்சனை, நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை எனப் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
அந்த சவால்களை வெற்றிக்கொண்டு இந்த 10 மாதங்களாக நாங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் உங்களுக்கு தெரியும். குறிப்பாக நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை, நீதியை நிலைநாட்டுவதில் இருந்த சிக்கல்கள் தொடர்பிலும் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது.
இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் மோசடி என 3 பிரதான சவால்கள் எங்கள் முன் இருந்தன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சட்டத்தை முறையாக, கடுமையாக நடைமுறைபடுத்தினோம். இதனால் நாட்டில் பல இடங்களில் துப்பாக்கி சூட்டு சம்பங்கள் அதிகரிக்க தொடங்கியது.
பலரை நாங்கள் தொடர்ச்சியாக கைது செய்தோம். போதைப்பொருள் கடத்தல் பல முறியடிக்கபட்டன. நாட்டை பாதுகாக்க பல நடைமுறைகளை கையாண்டோம். நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை கையாண்டோம்.
நாடு என்ற ரீதியில் பல உபாயங்களை சரியாக கையாண்டு நடைமுறைபடுத்தியதன் விளைவாக நேற்றைய தினம் ”இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த பெக்கோ சமன் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பாதாள உலகக்குழுவை சேர்ந்த 05 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக கடந்த 7 நாட்களாக இலங்கை பொலிஸ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றபுலனாய்வினர் தொடர்ச்சியாக இந்தோனேசிய பொலிஸாருடன் தொடர்பில் இருந்தார்கள். இவர்களை கைது செய்வது தொடர்பாக உன்னிப்பாக நாங்கள் அவதானம் செலுத்தியிருந்தோம்.
இன்டர்போல் மற்றும் இந்திய உளவுத்துறையும் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள். நாங்கள் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருந்தோம் அதன் விளைவாக இவ்வாறு பாதாள உலகத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பலர் தொடர்சியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நீதி அனைவருக்கும் பொதுவானது. தொடர்ச்சியாக பதவிகள் மற்றும் அந்தஸ்த்து என்பன பாராமல் அனைவரும் விசாரிக்கபடுவார்கள். நீதிக்கு மேல் எமது அரசாங்கத்தில் எதுவும் பெரிதல்ல. நீதிக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் .எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்.
தவறு செய்தவர்கள் எங்களது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை மீண்டும் நாங்கள் தெரிவித்துகொள்கின்றோம்.
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள்.
அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.
அதேபோன்று தான், அது அரசியல் வாதியா, பொலிஸ் அதிகாரியா, பாதாள உலக குழுவை சேர்ந்தவர்களா என்றெல்லாம் பாராமல் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றுக்கொடுக்கப்படுவார்கள் என்பதை மீண்டும் உறுதிப்பட தெரிவித்துக்கொள்கின்றேன்” இவ்வாறு ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.