ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ராமேசுவரம் வரவேண்டிய ரயில்களும், ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திறந்து வைத்தார். ஏப்ரல் 7-ம் தேதி முதல் ராமேசுவரத்திலிருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை, கன்னியாகுமரி, கோவை மற்றும் வடமாநிலங்களுக்கும் ரயில் சேவைகள் நடைபெறுகின்றன. இந்த புதிய ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் நாட்டின் முதல் செங்குத்து தூக்குப் பாலம் என்ற பெருமையும் கொண்டது.
இந்நிலையில், பயன்பாட்டுக்கு வந்த பின் தூக்குப் பாலம் திறந்து மூடுவதில் இரண்டு முறை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, ரயில் போக்கு வரத்தில் தாமதம் ஏற்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண புதிய தூக்குப் பாலத்தில் உள்ள கம்பிவடம், சக்கரங்களில் பராமரிப்பு செய்யும் பணியில் ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் புதிய பாம்பன் பாலத்தின் நடுப்பகுதியில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணிக்காக தூக்கி இறக்க முயன்றனர். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் செங்குத்து தூக்குப் பாலத்தை உடனடியாக கீழே இறக்க முடியவில்லை.
பின்னர், அது சரி செய்யப்பட்டு 3 மணி நேரத்துக்குப் பின்பு செங்குத்து தூக்குப் பாலம் கீழே இறக்கப்பட்டது. ஆனால், தண்டவாளத்துடன் சமமாக சேராமல் தூக்குப் பாலம் ஏற்ற இறக்கமாக இருந்தது. தொடர்ந்து அதையும் சரிசெய்தனர். இதன் காரணமாக, ராமேசுவரம் வரவேண்டிய ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. ராமேசுவரத்திலிருந்து புறப்பட்ட ரயில்களும் அக்காள்மடம் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. பின்னர், ரயில் போக்குவரத்திலும் இன்று மாற்றம் செய்யப்பட்டது.