பிரதமர் பதவியில் மாற்றமில்லை! ஜனாதிபதியே பிரதமரைப் பாதுகாத்ததாக உதயகம்மன்பில விளக்கம்

பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது குறித்து  உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாவது ”  பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் ஏதேனும் விடயத்தில் தவறு இருந்தால் அதனை ஜனாதிபதி சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டும்.
அல்லது பிரதமர் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். இவ்விருவரையும் தவிர்த்து பிறிதொருவர்
பிரதமரின் கருத்தை விமர்சிக்க முடியாது.

அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமரை மக்கள் மத்தியில் மலினப்படுத்தியுள்ளார். பிரதமரின் கருத்தை தெளிவுப்படுத்தும் அளவுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க சிரேஷ்டத்துவமிக்கவரல்ல, தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.

இதனை நாம் கடந்த மே மாதம் வெளிப்படுத்தியிருந்தோம். அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக
அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கி விட்டு
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில்
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் கலந்துக் கொண்டுள்ளார்.

ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெரும்பாலானவை தேசிய மக்கள் சக்திக்கு சொந்தமானது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவராக பிரதமர் உள்ளார். மேற்குலக நாடுகளின் தூதரக பிரதிநிதியாகவும்,
அரசாங்கத்தின் பிரபுக்கள் வகுப்பின் பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியாகவும், பாலின சமத்துவத்தின் பிரதிநிதியாகவும், கல்வி மற்றும் தொழில்துறை பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார்.

ஆகவே அவரை பதவி நீக்க முடியாது என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் அதிருப்தியடைந்துள்ளனர். பிரதமருக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி அவர் சுயமாகவே பதவி விலகும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

நன்றி

Leave a Reply