புதுவையில் புதிய வகை விநாயகர் சிலைகள் – ஆர்டர்கள் குறைவால் கவலை! | New Design Lord Ganesha Idols: Orders Reduced on Puducherry

புதுச்சேரி: விநாயகர் சிலை வைப்பதில் கெடுபிடி மற்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விநாயகர் சிலைகள் வியாபாரம் குறைந்துள்ளதாக சிலை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் புல்லட் விநாயகர், கிட்டார் விநாயகர் என புது வரவு சிலைகளையும் உருவாக்கியுள்ளனர்.

புதுச்சேரி பிள்ளையார் குப்பம் கூனி முடக்கு பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் 10 வருடங்களுக்கு மேலாக விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஒரு அடி மண் விநாயகர் முதல் 15 அடி உயரம் பேப்பர் விநாயகர் வரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் சிலைகள் தமிழகம் மற்றும் பல்வேறு பெருநகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு புல்லட் விநாயகர், கருடன் விநாயகர், கிட்டார் விநாயகர், பத்து தலை ராவணர் விநாயகர் என புதுவரவாக சிலைகளை உருவாக்கி உள்ளனர்.

இது குறித்து விநாயகர் சிலை வடிவமைப்பாளர் ரகு கூறுகையில், “சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கிழங்கு மாவு மற்றும் பேப்பர் மாவுகளை பயன்படுத்தி ஆண்டுதோறும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விதவிதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரு அடி மண் விநாயகர் முதல் 15 அடி உயரம் பேப்பர் விநாயகர் வரை உற்பத்தி செய்யப்பட்டு 100 ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆண்டு 60 சிலைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த ஆண்டு சிலைகளுக்கு இதுவரை முன்பதிவு செய்யப்படவில்லை” என்று சிலை வடிவமைப்பாளர் கூறினார்.

சிலை வடிவமைப்பு குறைந்துள்ளது தொடர்பாக விசாரித்தற்கு, விநாயகர் சிலை வைப்பதில் அனுமதி பெறுவதில் கெடுபிடியுள்ளது. அத்துடன் தொடர் மழையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இவை தான் வியாபாரம் குறைந்து உள்ளதற்கு முக்கியக் காரணம்” என்று சிலை வடிவமைப்பாளர் கூறினார்.

நன்றி

Leave a Reply