அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவும்.
அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்கத்தின் காரணமாகவே மக்களுக்கு அதிகமான இழப்பீடுகளை வழங்க முடிந்தது.
பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுங்கள்.
இறால் பண்ணையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு மற்றும் சலுகை கடன் திட்டம்.
நிர்மாணங்களை மேற்கொள்ளும்போது, பிரதேசமாக மாத்திரமன்றி, நாடாகவும் கிடைக்கும் பொருளாதார நன்மைகளில் கவனம் செலுத்துங்கள்.
புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று (13) முற்பகல் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி நிறைவு செய்யுமாறும், அந்த இழப்பீடுகளை வழங்கும்போது, வனப்பகுதியா? அல்லது சட்டபூர்வமானதா? என்பதை கருத்திற்கொள்ளாமல் இழப்பீடுகளை வழங்குமாறும், வனப்பகுதிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
அனர்த்த நிலைமை காரணமாக மாவட்டத்தில் 627 வீடுகள் முழுமையாகவும், 20,813 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அந்த மக்களுக்கு அவசியமான இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, மீள்குடியமர்த்தலின் போது அவர்களை அரச காணிகளில் மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறும், அரச காணியை வழங்க முடியாத நிலைமையில், காணி வாங்குவதற்காக வழங்கப்படும் 05 மில்லியன் ரூபாயை அவர்களுக்கு வழங்குமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும்போது 50 இலட்சம் மதிப்புள்ள வீட்டின் உரிமையைப் பெறும் வகையில், முறையாக இந்த வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

