2022 ஆம் ஆண்டில் நேபாளத்தில் தனது ரயில் பாதைகளை விரிவுபடுத்திய பின்னர், இந்திய ரயில்வே இப்போது மற்றொரு சர்வதேச விரிவாக்கத்திற்கு தயாராகி வருகிறது.
அதன்படி, மலைகளால் சூழப்பட்ட இமயமலை தேசத்தை இந்தியாவின் 70,000 கிலோமீட்டர் ரயில் வலையமைப்பில் இணைக்கும் வகையில், பூட்டானுக்கு இரண்டு புதிய ரயில் பாதைகளை தொடங்குவதாக இந்திய ரயில்வே திணைக்களம் திங்களன்று (செப்.01) அறிவித்தது.
69 கிலோ மீற்றர் மற்றும் 20 கிலோ மீற்றர் நீளமுள்ள இந்த இரண்டு ரயில் பாதைகளும் பூட்டானை அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காளத்தின் எல்லை மாநிலங்களுடன் இணைக்கும்.
69 கிமீ கோக்ரஜார் (அசாம்) – கெலெபு (பூட்டான்) பாதை மற்றும் 20 கிமீ பனார்ஹட் (மேற்கு வங்கம்) – சாம்ட்சே (பூட்டான்) பாதை முறையே ரூ.3,456 கோடி மற்றும் ரூ.577 கோடி (இந்திய ரூபா) செலவில் அமைக்கப்படும்.
69 கி.மீ கோக்ரஜார்-கெலெபு ரயில் பாதை நான்கு ஆண்டுகளில் அமைக்கப்படும்.
அதே வேளையில், 20 கி.மீ பனார்ஹட்-சம்ட்சே ரயில் பாதை மூன்று ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்படும்.
இந்த முயற்சியின் விவரங்களை இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டனர்.
பூட்டானின் கெலேஃபு மைண்ட்ஃபுல்னஸ் நகரமாகவும், சாம்ட்சே ஒரு தொழில்துறை நகரமாகவும் உருவாக்கப்பட்டு வருவதால், இந்தத் திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று வைஷ்ணவ் கூறினார்.
இந்த எல்லை தாண்டிய திட்டங்களுக்கான விவாதங்கள் 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தொடங்கின.
ஆரம்பத்தில் ஐந்து பாதைகள் முன்மொழியப்பட்டன.
அவற்றில் ஹசிமாரா-ஃபுயன்ட்ஷோலிங் மற்றும் பாத்சலா-நங்லாம் ஆகியவை அடங்கும்.
2005 ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியாவின் ரயில்வே இணையமைச்சர் நாரன்பாய் ஜே ரத்வா மற்றும் பூட்டானின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் லியோன்போ காண்டு வாங்சுக் ஆகியோர் இந்தியாவையும் பூட்டானையும் இணைக்கும் ஐந்து ரயில் பாதைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர்.