காஸா போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தை எதிர்த்து நேற்று (9) இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு டெல் அவிவ் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் போன்ற கோஷங்களை எழுப்பி கோரிகைகளை முன்வைத்து போராட்டமொன்றை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காஸாவில் மீதமுள்ள 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்காகவும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் சுமார் 20 பணயக்கைதிகள் இன்னும் உயிருடன் இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விடுவிக்கப்பட்ட பெரும்பாலான பணயக்கைதிகள் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் விளைவாக வெளிவந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் அதிகமான பணயக்கைதிகளை விடுவிக்கக் கூடிய போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முறிந்ததுடன் நேற்று முன்தினம் (8) காஸா நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,ஒப்புதல் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து இஸ்ரேலிய அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், அதன் நெருங்கிய ஐரோப்பிய நட்பு நாடுகள் சிலவற்றிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.