பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்த பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பானது அல்ல என இந்திய நீதிபதி குன்ஹா தலைமையிலான விசாரணைக் குழு அறிவித்துள்ளது.
2025 பிரிமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணி சம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படடிருந்தது.
நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் , பலர் படுகாயம் அடைந்தனர்.
குறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு, முழு விசாரணையை நடத்தி முடித்து, அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த அறிக்கையில், கூட்ட நெரிசல் விபரீதத்திற்கு ஆர்சிபி அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்த சரியான திட்டம் இல்லை எனவும் அனுமதி பெறுவதில் குழப்பங்கள் காணப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகள் நடத்த பாதுகாப்பானது அல்ல என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த அறிக்கை , கர்நாடகாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் , 2026ம் ஆண்டு இந்த மைதானத்தில் பிரிமீயர் லீக் போட்டிகளை நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.