பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் இறந்தவர்கள் உடலை புதைக்க முன்கூட்டியே 20-க்கும் மேற்பட்ட புதை குழிகள் தோண்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி – உடுமலை சாலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்தில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயிரிழப்பவர்களின் உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பொள்ளாச்சி பகுதியில் பெண் ஒருவர் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு 20-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு தயார் நிலையில் இருந்தன. இதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக இறப்பு நிகழ்ந்தால் இறந்தவர்களின் உறவினர்கள் மயானத்தை பராமரித்து வருபவர்களிடம் குழி தோண்டி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வார்கள். ஆனால் அன்று ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில், இருபதுக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கரோனா தொற்று காலங்களில் அதிக அளவில் இறப்பு நிகழ்ந்த போதிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை. தற்போது இந்த குழிகள் எதன் அடிப்படையில் தோண்டப்பட்டது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குழிகள் தோண்டுவதற்கு ஆட்கள் கிடைக்காததால் மயானத்தை பராமரித்து வரும் பாபு என்பவர் இந்த குழிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் குமரன் கூறும்போது, “மயானத்தில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு விட்டன. இதுகுறித்து பாபுவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது” என்றார்.