மதுரை ஆதீனம் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras HC orders police to file reply regarding Madurai Adeenam’s plea

சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அருகில் உள்ள காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதுகுறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும் இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தனர், தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார்.

இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், விபத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி மட்டுமே பதிலளித்ததாகவும், தனது தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பிரிவினருக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் எந்த உள்நோக்கத்துடனும் இந்த கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்றும், தனது கருத்துக்களால் எந்த வன்முறை சம்பவங்களும் நிகழ்வில்லை என்றும், தன்னை துன்புறுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில், ஆதீனத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அளிக்கப்பட்ட புகார்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மதுரை, கோவை போன்ற இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. மத நல்லிணக்கத்துக்கு எதிராக தேவையில்லாமல் ஆதீனம் பேசியுள்ளார். இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆதீனத்தின் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

நன்றி

Leave a Reply