63
ஈரான் உடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை (Aircraft Carrier) அனுப்ப அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தயாராகி வருகிறது.
ஏற்கனவே அப்பகுதியில் இருக்கும் USS Abraham Lincoln கப்பலுடன் இணைய, தற்போது வர்ஜீனியா கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள USS George H.W. Bush கப்பலை அனுப்ப பென்டகன் திட்டமிட்டுள்ளது.
ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார் என்பதை உணர்த்தவே இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறது.
__
டிரம்ப் – நெதன்யாகு சந்திப்பு: ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை?
வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையிலான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நிறைவடைந்தது.
சுமார் 3 மணி நேரம் மூடிய கதவுகளுக்கு பின் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் காசா போர் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. “ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இல்லையெனில் கடந்த காலத்தைப் போலவே (Operation Midnight Hammer) கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் ஆயுதக்குழுக்களுக்கான ஆதரவையும் முடக்க வேண்டும் என நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
2025-ஆம் ஆண்டு ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ளன. ஈரானுடன் மீண்டும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த டிரம்ப் நிர்வாகம் முயற்சிக்கும் அதே வேளையில், ராணுவ ரீதியாகவும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

