மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்துக்கு சவால்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர்நிலை காரணமாக மத்தியதரைக் கடல் மற்றும் கல்ஃப் வளைகுடா பகுதிகளில் வர்த்தக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக இலங்கையின் தேயிலை உள்ளிட்ட ஏற்றுமதிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

தற்போது வரவிருந்த கப்பல்களுக்கு நேரடி தடைகள் எதுவும் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டார். எனினும், ஈரான் தனது கடல் எல்லையை மூடும் வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக கிழக்கிலிருந்து மேற்குப் பகுதிகளுக்கு சரக்கு கொண்டு செல்லும் சில கப்பல்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் தேவையான வசதிகளை வழங்க முடியுமா என விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு பிராந்தியத்திலிருந்து மேற்குப் பிராந்தியத்திற்கு சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு தேவையான வசதிகளை வழங்க கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்ட ஆகிய துறைமுகங்களை பயன்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

குறிப்பாக மத்தியதரைக் கடல் மற்றும் கல்ஃப் வளைகுடா எல்லைகளில் கப்பல் போக்குவரத்து பெருமளவில் மந்தமடைந்துள்ளதாகவும், வர்த்தக கப்பல் இயக்கம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக அந்த பிராந்தியங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கையின் தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு எதிர்வரும் நாட்களில் சவால்கள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்தார்.

மேலும், அந்த பகுதிகளுக்கு அனுப்பப்படவுள்ள தேயிலை மற்றும் பிற ஏற்றுமதி பொருட்களை தற்போதைக்கு துறைமுகத்திற்கு கொண்டு வராமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற நெரிசலை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மத்திய மலைநாட்டு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை அதிகமாக மத்திய கிழக்கு நாடுகள், குறிப்பாக ஈரான் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் கொள்முதல் செய்து வருகின்றன. எனவே, இந்த நிலைமை தொடர்ந்தால் தேயிலை ஏற்றுமதிக்கு கணிசமான தாக்கம் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையைக் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், தெளிவான முடிவு எட்டப்படும் வரை சம்பந்தப்பட்ட சரக்குகளை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வருவதில் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கருத்துகளை அமைச்சர் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டார்.

நன்றி

Leave a Reply