பனி மூட்டமான காடுகள். உயர்ந்த மலைகள். அந்த வழியாகச் செல்லும் ஒரு ரயில். தூரத்தில் யாரோ ஒருவர் கை அசைப்பதால் திடீரென அந்த ரயில் நிற்கிறது.
கண்ணை மூடிக்கொண்டு இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். நம்ப முடியவில்லையா?
ஆனால் இது கற்பனையல்ல! அன்றாடம் நடக்கும் நிகழ்வு. ஆம். வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அலஸ்கா நகரில் தினமும் நடக்கும் சாதாரண நிகழ்வு.
நடை பாதையோ, சாலைகளோ, ரயில் நிலையங்களோ இல்லாத அந்த நகரின் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த ரயில்தான் உயிர்நாடி.
இவர்களுக்காகவே உருவாக்கப்பட்டவைதான் ‘ஃப்ளாக் ஸ்டாப் ரயில்கள்’ (Flag Stop Trains).
கொடி, துணி, அல்லது கை ஆகியவற்றால் தூரத்தில் நின்றவாறு அசைப்பவர்களுக்காக இந்த ரயில்கள் நிற்கும். பாதையில் எந்த இடத்திலும் நிற்கும்.
இது வெறும் ஆடம்பர அமைப்பு அல்ல. அலஸ்காவின் கரடு முரடான நிலப்பரப்பிற்கு அவசியாமனது. அங்கு சில குடும்பங்கள் மலைகளிலும், ஆறுகளின் ஓரங்களிலும் வாழ்கின்றனர்.
அவர்கள் நகரங்களுக்குச் செல்வதற்கான ஒரே வழி இந்த ரயில்கள்தான். குறிப்பாக குளிர் காலத்தில் பாதைகள் பனியால் தடை படும்போது சரக்குகள், அஞ்சல்கள் ஆகியவற்றை இவை எடுத்துச் செல்கின்றன. உறைபனிக் குளிரில் காத்திருப்பவர்களை ஏற்றிச் செல்கின்றன.
கூடவே மக்களின் புன்னகைகளையும் சுமந்து செல்கின்றன.
வாழ்வின் மகத்துவம், இயற்கையின் கடுமை, மனித நேயம் ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் இந்த ரயில்கள் இணைக்கின்றன.
இவை அனைத்துமே மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகள். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இதை நினைத்துப் பார்ப்பதில்லை.
ஆகவேதான் ஆண்டவன் இப்படிச் சொல்கிறான்:
’’நீங்கள் அவனிடம் கேட்ட அனைத்தையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடுவீர்களாயின், அவற்றை உங்களால் வரையறுக்கவே முடியாது. உண்மை என்னவென்றால் மனிதன் அநீதியாளனாகவும் நன்றி கெட்டவனாகவும் இருக்கிறான்”. (14:34)
✍️ நூஹ் மஹ்ழரி