மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை – Oruvan.com

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் இடத்தை அழ்வாய்வு செய்யும் பணிகளை ஆரம்பத்தில் இருந்தே மேற்பார்வையிட்டவரும், குறித்த இடத்தை குற்றச் சம்பவம் இடம்பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தவருமான நீதிவான் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் தகவல்களை சேகரித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தனது முதல் அறிக்கையை வெளியிட்டு, நீதி அமைச்சர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, உயர்கல்வி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு தனித்தனியாக பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் (செப்டெம்பர் 03) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட  கோட்டை நீதிபதி நிலுபுலி லங்காபுர மற்றும் யாழ்ப்பாண நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா ஆகியோரின் பெயர்களும் இதில் உள்ளடங்கும்.

தற்போது செம்மணி அகழ்வாய்வை விசாரிக்கும் தற்போதைய கற்றறிந்த நீதவான் பதவி உயர்வு பெற்றால், தற்போதைய விசாரணை தொடர்பாக அவருக்குப் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்கும் நீதவானுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென, ஜனாதிபதி இந்த நியமனங்களை வழங்குவதற்கு முன்னதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட செம்மணிப் புதைகுழி குறித்த தனது முதல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமாரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுகள் இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் நேற்றைய தினம் வரையில் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 231 ஆக உயர்வடைந்துள்ளது.

முன்னாள் நீதவானால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள், நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கு உள்ளானவர்கள் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பொது அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவிக்கு உத்தரவிடுமாறு நேற்றைய தினம் (செப்டெம்பர் 03) வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் மாஅதிபருக்கு பரிந்துரைத்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் இலங்கை பொலிஸாரும், இலங்கை இராணுவமும் ‘இணைந்த தரப்பினராக’ அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 13 பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளில், எந்தவொரு அரச அதிகாரி, சிவில் சமூகப் பிரதிநிதி அல்லது காணாமல் போனவரின் குடும்ப உறுப்பினரைத் தொடர்பு கொள்வது உட்பட, எந்த வகையிலும் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை இராணுவத் தளபதி ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

விசாரணைகளை நடத்தும்போது (அதாவது, ஒரு நபர் வாக்குமூலம் அளிக்க ஏன் அழைக்கப்படுகிறார் என்பதை தெளிவாகத் தெரிவிப்பதற்காக) ஜூலை 2, 2025 திகதியிடப்பட்ட பொலிஸ்மா அதிபரின்  RTM 101/CRTM 61 இலக்க சுற்றறிக்கைக்கு அமைய செயல்படுமாறும், குறித்த தவறுகள் தொடர்பிலான தெளிவான சந்தேகம் காணப்படுகின்ற சந்தர்ப்பங்களைத் தவிர, செம்மணி புதைகுழி விசாரணை குறித்து செய்தி வெளியிடும் ஊடவியலாளர்களை அழைத்து புலனாய்வு அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்குமாறு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரைணைப் பிரிவுக்கு (CTID) அறிவுறுத்தல்களை வழங்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் ஒருமுறை பொலிஸ் தலைவருக்கு நினைவூட்டியுள்ளது.

பாதுகாப்புப் படையினர் அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மீது சுமத்தப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் சட்டவிரோதக் கொலைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வழக்குத் தொடர பரந்த அதிகாரங்களைக் கொண்ட, நிரந்தர, சுயாதீனமான ‘அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் கடுமையான குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடரும் அலுவலகம்’ ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதி அமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளது.

தொல்பொருள் ஆய்வு குழுக்கள் போன்ற முக்கிய மனித வளங்களை பெற்றுக்கொள்ளும்போது மற்றும் அவ்வாறான வளங்களை ஒதுக்கீடு செய்யும்போது செம்மணி விசாரணையை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சருக்கு பரிந்துரைத்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, பல மனித புதைகுழிகளை அகழ்வாய்வு செய்வதற்கும் தொல்பொருட்களை மீட்டெடுப்பதற்கும் உதவக்கூடிய தொல்பொருள் நிபுணர்கள் குழு அமைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply