மனுஷாவின் முன்பிணை மனுவை 08 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாம், கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 8 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன் பிணை மனு இன்று (03) கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஆணைக்குழுவின் சார்பாக முன்னிலையான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் நாயகம் திருமதி அனுஷா சம்மந்தப்பெரும, மனுவுக்கு எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

மனுஷ நாணயக்கார சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த ஆட்சேபனைகளுக்கு பதில்களை தாக்கல் செய்ய ஒரு திகதி வழங்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார்.

அதன்படி, அடுத்த செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வ பதில்களை தாக்கல் செய்யுமாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

அதன்பின், இந்த விசாரணைக்காக எதிர்வரும் 8 ஆம் திகதி அழைப்பாணை அனுப்ப உத்தரவிடப்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்படுவதற்கு முன்பு தன்னை முன் பிணையில் விடுவிக்கக் கோரி இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

நன்றி

Leave a Reply