யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை, 10-02-2026) துப்பாக்கியுடன் நபர் ஒருவர் நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஒரு போலித் துப்பாக்கி என்பதும் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது.
தலைக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து மிகவும் மர்மமான முறையில் வந்த நபர் ஒருவரால் சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. குறித்த நபர் பச்சை மிளகாய் வாங்கிக்கொண்டு, சந்தையில் “வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் யார்?” என வினாவியுள்ளார்.
அவர் கையில் வைத்திருந்த பையில் T-56 ரக துப்பாக்கி போன்ற ஒன்றும், இடுப்பில் ஒரு கைத்துப்பாக்கியும் இருந்ததை அவதானித்த வியாபாரிகள் உடனடியாகச் சுன்னாகம் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் CCTV காட்சிகளை ஆய்வு செய்து, விரைந்து செயற்பட்டு அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர் கொண்டு வந்தது உண்மையான துப்பாக்கி அல்ல, அது தத்ரூபமாகத் தயாரிக்கப்பட்ட விளையாட்டு அல்லது போலித் துப்பாக்கி என்பது சோதனையில் தெரிந்தது.
முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. எதற்காக அவர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களைத் தேடினார் என்பது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் போலியானது எனத் தெரிந்தாலும், யாழ்ப்பாணத்தில் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் காரணமாகவே வியாபாரிகள் இவ்வளவு அச்சமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பொது இடங்களில் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post மருதனார்மட சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது போலித் துப்பாக்கி appeared first on Global Tamil News.
