மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் மலையக மக்கள் 30 வருட காலமாக பிரஜாவுரிமை இன்றி வாழ்ந்துக் கொண்டிருந்தனர். ஏனைய சமூகத்திற்கு அரசின் சலுகைகள் கிடைத்த பொழுது, மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக காணப்பட்டனர். அக்காலகட்டத்தில் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் பல கடுமையான போராட்டங்கள் முன்னெடுத்து மலையக மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்றுக்கொடுத்தார். மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுடைய முயற்சியால் முதன் முறையாக மலையக மக்கள் சார்ந்த அமைச்சுகள், நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சுக்கள், நிறுவனங்கள் ஊடாக மலையக மக்களுக்கு முழுமையான சேவைகள் சென்றடைவதற்கான வழிமுறைகள் அவரால் வகுக்கப்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் ஏனைய சமூகங்களுடன் மலையக மக்களை ஒப்பிடுகையில் மலையக மக்கள் முதன்மை நிலையை நோக்கி வளர்ச்சி அடைந்து வருகின்றனர்.
2003 ஆம் ஆண்டு மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் இறுதியாக 3 இலட்சம் மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கி, பிரஜாவுரிமை பிரச்சினைக்கு இ.தொ.காவால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஒவ்வொரு காலப்பகுதியிலும் மலையக மக்கள் சார்ந்த பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசனின் ஆலோசனைக்கு அமைய, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரம் அவர்களின் அமைச்சின் அமைச்சரவை அனுமதி பத்திரம் ஊடாக அக்காலப்பகுதியில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் முன்னிலையில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டு, பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, உருவாக்கப்பட்டது தான் மலையக அதிகார சபை. அக்காலப்பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் இருந்த போதிலும் இம்முயற்சியை வரவேற்றது.
கடந்த காலத்தில் ஜீவன் தொண்டமானின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக மலையக அபிவிருத்தி சபை பல ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது.
மேலும் மலையக அதிகார சபையின் தலைவராக ராஜதுரை செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜதுரை அவர்கள் தோட்ட பகுதியில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து நீதிபதி கதிரையில் பதில் நீதிபதியாக அமர்வதற்கு கல்வி திறனை வளர்த்து, மலையகத்தில் கல்வி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வாழ்க்கையை வெற்றிக்கண்டார். அவர்போன்ற ஒருவர் மலையக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக செயற்பட்டு, மக்களுக்கு சேவைகளை முன்னெடுத்தமை எதிர்கால மலையக கல்வியில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமான நிறுவனமாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
மலையக மக்கள் சார்ந்த அரச நிறுவனங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் காணப்படுகிறது. எனவே மலையக அதிகார சபை என்பது முழுமையாக மலையக மக்களுக்காக சேவை முன்னெடுக்க உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கையை ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.